

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அக்னி வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில், இளநீர் விலை உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு இளநீர் ரூ.60-க்கு விற்கப்பட்ட போதிலும் விற்பனை குறையவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்துவருகிறது. குறிப்பாக அக்னி வெயில்தொடங்கிய மே 4-ம் தேதி முதல்வெயில் உக்கிரமடைய தொடங்கியது. கடந்த சில நாட்களாக தூத்துக் குடியில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. பகல்நேரவெப்பநிலை இயல்பை விட அதிகரித்து காணப்படுகிறது. 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துவதால் மக்கள் கடுமையாக திண்டாடி வருகின்றனர்.
வெயிலின் தாக்கத்தால் மக்கள் பகல் நேரங்களில் வெளியேவர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மக்கள் சாலையோர குளிர்பான கடைகளில் குவிந்து வருகின்றனர். இதனால் இளநீர், நுங்கு, பதநீர், தர்ப்பூசணி,கம்மங்கூழ் மற்றும் குளிர்பானங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக இளநீருக்கு மக்கள் மத்தியில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியை பொறுத்தவரை இளநீர் பொள்ளாச்சியில் இருந்தே விற்பனைக்கு வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை ஒரு இளநீர் ரூ.50 முதல் ரூ.55 என்ற விலையில் விற்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இளநீர் விலை ரூ.60 ஆக அதிகரித்துள்ளது. விலை அதிகரித்துள்ள போதிலும் இளநீர் விற்பனை சிறிதும் குறையவில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர். இது தொடர்பாக தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் முத்து மாரியப்பன் கூறியதாவது:
பொள்ளாச்சியில் இருந்து இளநீர் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. தூத்துக்குடியில் 3 மொத்த இளநீர் வியாபாரிகள் உள்ளனர். அவர்களிடம் வாங்கி தான் நாங்கள் விற்பனை செய்கிறோம். எங்களுக்கு ஒருஇளநீர் ரூ.53 விலைக்கு கிடைக்கிறது. அதனை நாங்கள் ரூ.60-க்கு விற்பனை செய்கிறோம். பெரியபழக்கடை முதலாளிகள் நேரடியாகபொள்ளாச்சியில் இருந்து இளநீரை வாங்கி வந்து விற்கின்றனர். அவர்கள் ஒரு இளநீரை ரூ.55-க்கு விற்கிறார்கள்.
பொள்ளாச்சியில் இருந்து ஆந்திராவுக்கு அதிக இளநீர் செல்வதால் எங்களுக்கு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது வாரத்துக்கு 2 நாட்கள் மட்டுமே தலா 7 லாரிகளில் இளநீர் வருகிறது. முன்பெல்லாம் தினசரி லாரிகளில் இளநீர் வரும். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஒரு இளநீரை ரூ.40 முதல் ரூ.45 விலைக்கு தான் விற்றோம். இந்த ஆண்டு வெயிலின் தாக்கமும் அதிகம், இளநீர் வரத்தும் குறைவு. இதனால் தான் விலை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் உயருவதற்கான வாய்ப்பு உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம், வள்ளியூர் பகுதி களில் இருந்து வரும் உள்ளூர் இளநீர் ரூ.25 முதல் ரூ.30-க்குவிற்கப்படுகிறது. ஆனால், அதில் 150 மில்லி அளவுக்கு தான் தண்ணீர் இருக்கும். ஆனால் பொள்ளாச்சி இளநீரில் 300 மில்லி தண்ணீர் இருக்கும். எனவே, தூத்துக்குடி மக்கள் பொள்ளாச்சி இளநீரை தான் விரும்பி கேட்பார்கள். இதனால் இங்குள்ள வியாபாரிகள் யாரும் உள்ளூர் இளநீரை விற்பதில்லை. பொள்ளாச்சி இளநீரை தான் விற்பனை செய்கிறார்கள். விலை உயர்ந்த போதிலும் இளநீர் விற்பனை சிறிதும் குறையவில்லை என்றார் அவர்.