

உதகை: உதகையிலுள்ள ஸ்டோன் ஹவுஸ்பகுதியிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் நீலகிரி வாழ் வன விலங்குகள், தோடர் பழங்குடிகளின் வாழ்வியல் பொருட்கள், படுகர் இன மக்களின் கலை பொருட்கள், இருளர் பழங்குடிகளின் வாழ்வியல் பொருட்கள், விவசாய கருவிகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, உதகை200-வது ஆண்டு விழா மற்றும் உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, நீலகிரி மலைகளின் தொல்லியல் சின்னங்கள் குறித்தசிறப்பு கண்காட்சி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. நீலகிரி எம்.பி. ஆ.ராசா திறந்துவைத்து பார்வையிட்டார்.
இந்த கண்காட்சியில், நீலகிரிமலைகளின் தொன்மையை அறிந்து கொள்ளும் வகையில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மக்கள் வாழ்ந்த இடங்கள் குறித்தும், மாவட்டத்தின் பல்வேறுஇடங்களில் காணப்படும் வரலாற்றுக்கு முந்தைய கால பாறைஓவியங்களும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால பண்பாட்டு நினைவுச்சின்னங்களும், அதுதொடர்பான ஆவணங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இக்கண்காட்சியின் வாயிலாக, நீலகிரி மாவட்டத்தில் ஐரோப்பியர்கள் வருகைக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு இடங்கள், தொல்பொருட்கள் மற்றும் இதர வரலாற்று குறிப்புகள்உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, உதகை நகர்மன்றத் தலைவர் வாணீஸ்வரி, ஆணையர் ஏகராஜ், துணைத் தலைவர் ரவிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.