Published : 19 May 2023 06:22 AM
Last Updated : 19 May 2023 06:22 AM

தஞ்சாவூரில் சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடப்பட்ட 50 ஆண்டுகள் பழமையான ஆலமரம்

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடப்பட்ட பழமையான ஆலமரத்துக்கு தன்ணீர் ஊற்றும் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர். படம்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்ட 50 ஆண்டுகள் பழமையான ஆலமரம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடப்பட்டது. 16 டன் எடை கொண்ட அந்த மரம் கிரேன்கள் மூலம் 3 கிமீ தொலைவு எடுத்து வந்து நடப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையோரங்களில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதில் பழமை வாய்ந்த மரங்களும் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி, அகற்றப்பட்ட ஒரு மரத்துக்கு பதிலாக புதிதாக 10 மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர் மணிமண்டபத்தில் இருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு செல்லும் வல்லம் நம்பர் 1 சாலையில் 50 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தையும் சாலை விரிவாக்க பணிக்காக அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்தனர்.

மேலும், பழமை வாய்ந்த இந்த மரத்தை வேருடன் பெயர்த்து எடுத்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஆலமரத்தின் கிளைகள் வெட்டிக்கழிக்கப்பட்டன. மேலும் மண்ணை தோண்டி மரம் வேருடன் பிடுங்கப்பட்டு, 7 மீட்டர் உயரம், 16 டன் எடை உடைய இந்த மரம் 2 கிரேன்கள் மூலம் 3 கிமீ தொலைவுக்கு கொண்டு செல்லப்பட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடப்பட்டது.

இதைப் பார்வையிட்டு, மரத்துக்கு தண்ணீர் ஊற்றிய ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் கிராமங்களில் குறுங்காடுகள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. அதேபோல, சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்படும் 1 மரத்துக்கு பதிலாக 10 முதல் 20 மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

அதன்படி தஞ்சாவூரில் பழமை வாய்ந்த ஆலமரத்தை அப்புறப்படுத்த மனமில்லாமல், நெடுஞ்சாலைத் துறையினர், கவின்மிகு தஞ்சை இயக்கத்தினர் இணைந்து மரத்தை வேருடன் பெயர்த்து எடுத்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நட்டுள்ளனர். இது ஒரு நல்ல முயற்சி’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் செந்தில்குமார், உதவிக் கோட்டப் பொறியாளர் கீதா, உதவிப் பொறியாளர் மோகனா, கவின்மிகு தஞ்சை இயக்கத்தைச் சேர்ந்த முத்துக்குமார், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த பணி மேற்பார்வையாளர் திருமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x