

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் நாளை(மே 19) முதல் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கலைநிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது என தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளது: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் அமைந்துள்ள தென்னகப் பண்பாட்டு மையம், இந்திய அரசின் கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. 1986-ம் ஆண்டு ஜன.31-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த மையம் கிராமப்புற பாரம்பரிய கலைகள் மற்றும் பாரம்பரிய பழங்குடி கலைகளைப் பாதுகாக்கும் பணியை செய்து வருகிறது.
இந்நிலையில், இந்தக் கலைகளை பொதுமக்கள் நேரில் கண்டுகளிக்கும் வகையில் இம்மையம் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துவருகிறது. அதன்படி, தென்னகப் பண்பாட்டு மைய வளாகத்தில் நாளை(மே 19) முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் 8.30 மணிவரை வாராந்திர நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கலைகளைப் பாதுகாக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரந்தோறும் பொதுமக்கள் தென்னகப் பண்பாட்டு மையத்துக்கு திரளாக வந்து, கலைநிகழ்ச்சிகளை கண்டுகளிக்க வேண்டும். இதற்கு அனுமதி இலவசம் என தெரிவித்துள்ளார்.