

மதுரை: தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் மேலான ஓலைச்சுவடிகள் திரட்டப்படாமல் அழியும் அபாயத்தில் உள்ளதாக என சுவடியியல் துறை பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் வேதனையுடன் தெரிவித்தார்.
தொன்மை வரலாற்றுக்குரியவர்கள் தமிழர்கள். தமிழர்களின் வரலாற்றை வெளிக்கொணரும் ஆவணங்களாக கல்வெட்டுகள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் உள்ளன. இதில் ஓலைச்சுவடிகள் முதன்மை ஆவணமாக திகழ்கின்றன. முற்காலத்தில் வரலாற்று குறிப்புகளை ஓலையில் எழுதி சரிபார்த்த பின்பே கல்லிலும் செப்பிலும் வெட்டப்பட்டது. தமிழகம் முழுவதும் பரவலாக ஓலைச்சுவடிகள் கிடைத்தாலும் அவை திரட்டப்படாமல் ஆவணப்படுத்தாமல் அழிந்து வருகின்றன.
அரிய தகவல்களை உள்ளடக்கிய பொக்கிஷமான ஓலைச்சுவடிகளை 20 ஆண்டுகளாக கள ஆய்வு செய்து கண்டுபிடித்து அதனை பதிப்பித்து நூலாக்கி வருகிறார் சுவடியியல் அறிஞரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன். இது குறித்து அவர் கூறியதாவது: ”ஓலைச்சுவடிகள் பழந்தமிழர்களின் அறிவு மரபுத் தொகுதிகளாக திகழ்கின்றன. இத்தகைய ஓலைச்சுவடிகள் மூலம் சங்கத்தமிழர்களின் பண்பாட்டு மாண்பு உலகிற்கு தெரிந்தது. பக்தி இலக்கியச் சுவடிகள் மூலம் தமிழர்களின் இறையியல் கோட்பாடு மீட்டெடுக்கப்பட்டன.
பழந்தமிழர்களின் கணிதவியல், வானியல், சித்த மருத்துவவியல், சோதிடவியல், மந்திரவியல், ஜாலவியல், வரலாற்றியல், இலக்கியவியல் உள்பட பல்வேறு அறிவு மரபுகள் கிடைத்துள்ளன. இதில், சுவடி நூலகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், சித்த மருத்துவ மையங்கள், கோயில்கள், மடங்கள், ஜமீன்கள், கவிராயர் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 10 லட்சத்திற்குமேலான சுவடிகள் உள்ளன. மேலும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களில் கிடைக்கின்றன. கேரளா பல்கலைக்கழகக் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் 5024 சுவடிகள், பாரிஸ் தேசிய நூலகத்தில் 1500 சுவடிகள் உள்ளன. இப்படி பல லட்சம் ஓலைச்சுவடிகள் திரட்டித் தொகுத்து நூலாக்கப்படாமல் அழிந்து வருகின்றன. அவற்றை மீட்டு நூலாக்கம் செய்ய தமிழறிஞர்கள் முன்வர வேண்டும்.
தமிழகத்தில் சுவடிகளைப் படிக்க, படியெடுக்க, பதிப்பிக்கத் தெரிந்தவர்கள் வெறும் 10 பேர் மட்டுமே உள்ளனர். இளம் தலைமுறையினர் சுவடித்துறையில் ஆர்வமின்றி விலகியிருக்கின்றனர். இனிவரும் காலங்களில் சுவடிகளைப் படிக்கத் தெரிந்தவர்கள் இல்லாத நிலை ஏற்படும்.
நான் இதுவரை 56 ஓலைச்சுவடிகளை பதிப்பித்து நூலாக்கியுள்ளேன். 20 சுவடிகளைத் தொகுத்து பதிப்பிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளேன். இதில் ராஜராஜ சோழன் வரலாற்றுச் சுவடி, ராவண மருத்துவச் சுவடி, அகத்தியர்-12000 சுவடி, போகர்-12000 சுவடிகளையும் ஆகியவற்றை தேடி வருகிறேன்” என்றார்.