Published : 17 May 2023 03:22 PM
Last Updated : 17 May 2023 03:22 PM

ஆண்களைவிட பெண்களுக்கே உயர் ரத்த அழுத்த பாதிப்பு அதிகம்: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முதல்வர் ரேவதி

உயர் ரத்த அழுத்த தின விழிப்புணர்வு நிகழ்வு

சென்னை: உயர் ரத்த அழுத்த நோயால் ஆண்களை விட பெண்களே தற்போது அதிகம் பாதிக்கப்படுவதாக ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி தெரிவித்தார்.

சர்வதேச உயர் ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி முதல்வர் ரேவதி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர், பொது மருத்துவத் துறை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இறுதி ஆண்டு மாணவர்கள் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், எந்த மாதிரியான சிகிச்சைகளை எடுத்து கொள்ள வேண்டும் என்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நாடகம் ஒன்றை அரங்கேற்றினர்.

இதனை தொடர்ந்து மருத்துவமனை முதல்வர் ரேவதி பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு விழிப்புணர்வு பிரிசுரங்களை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரேவதி, "நோயை எவ்வாறு கண்டறிய வேண்டும், எவ்வாறு சிகிச்சை பெற வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக உயர் ரத்த அழுத்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அனைத்து தரப்பினருக்கும் உயர் இரத்த அழுத்தம் வரும். 18 முதல் 38 வயது உள்ளவர்களிடையே பாதிப்பு 7 சதவீதமாக உள்ளது. இது ஒரு சைலன்ட் கில்லர் நோய். இந்த நோய் வருவது மக்களுக்கு தெரியவே தெரியாது. திடீரென்று மாரடைப்பு வரும். திடீரென்று பக்க வாதம் வரும்.

பொதுமக்கள் முறையான பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் ஒரு முறை மாத்திரை சாப்பிட்டால் சரியாகி விடும் என்று இருக்கக் கூடாது. வாழ் நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். மயக்கம், சிறிய சிறிய பணிகள் செய்தாலும் சோர்வு ஏற்படுபவர்கள் ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உப்பு அதிகம் உள்ள உணவுகளை எடுத்துகொள்ள கூடாது.

உயர் ரத்த அழுத்தம் பெண்களை அதிகம் பாதிக்காது, ஆண்களை தான் அதிகம் தாக்கும் என இருந்தது. ஆனால், தற்போது உலக அளவில் எடுக்கப்பட்டுள்ள ஆய்வுகளின் படி ஆண்களை விட பெண்கள்தான் இந்த நோயால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்த அழுத்த நோயால், மாரடைப்பு பக்கவதாம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். பெண்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு மிக அவசியம். 40 வயதை கடந்தால் மருத்துவமனைக்கு சென்று முறையான பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x