

புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டையில் மே 19-ம் தேதி முதல் கட்ட அகழாய்வுப் பணி தொடங்க உள்ளது. இதில், தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் சங்க காலத்தைச் சேர்ந்த வட்ட வடிவிலான கோட்டை கொத்தளம், அகழிகள் இருந்ததற்கான கட்டுமானம் உள்ளது. மேலும், களிமண் அணிகலன்கள், கருப்பு- சிவப்பு பானை ஓடுகள் கிடைத்ததுடன், இரும்பு உருக்கு ஆலைகள் செயல்பட்டதற்கான கழிவுகள் ஆங்காங்கே கிடக்கின்றன. பழமையான கல்வெட்டும் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து, 2021-ல் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மூலம் இங்கு அகழாய்வு செய்யப்பட்டது. இந்தப் பகுதியைத் தொடர்ந்து அகழாய்வு செய்யக் கோரி தமிழக அரசுக்கு தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, பொற்பனைக்கோட்டையை அகழாய்வு செய்ய 2 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து, பொற்பனைக்கோட்டையில் தொல்லியல் துறை இயக்குநர் தங்கதுரை தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் கள ஆய்வு செய்து, அகழாய்வுக்கான இடத்தை தேர்வு செய்தனர். 2 ஏக்கருக்கு புதர்கள் அகற்றப்பட்டு, அங்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொற்பனைக் கோட்டை உட்பட 8 இடங்களில் அகழாய்வுப் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 8-ம் தேதி சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, மே 19-ம் தேதி பொற்பனைக்கோட்டையில் முதல் கட்ட அகழாய்வுப் பணி தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சியில், தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.