மருத்துவ குணம் நிறைந்த ஜம்பு நாவல் பழம் விற்பனை ஓசூரில் அதிகரிப்பு: விலை உயர்ந்தாலும் வாங்க மக்கள் ஆர்வம்

மருத்துவ குணம் நிறைந்த ஜம்பு நாவல் பழம் விற்பனை ஓசூரில் அதிகரிப்பு: விலை உயர்ந்தாலும் வாங்க மக்கள் ஆர்வம்
Updated on
1 min read

ஓசூர்: ஓசூரில் ஜம்பு நாவல் பழம் விற்பனை அதிகரித்துள்ளது. விலை அதிகம் இருந்தபோதும், மருத்துவ குணம் நிறைந்த நாவல் பழத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, ஜவளகிரி, அஞ்செட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளில் நாட்டு நாவல் மரங்கள் அதிக அளவில் இருந்தன. இதில் கிடைக்கும் நாவல் பழத்தை மலைவாழ் மக்கள் பறித்து நகரப் பகுதிகளில் விற்பனை செய்து வந்தனர். ஆனால், அதிக அளவில் மரங்கள் வெட்டப்பட்டதால், நாளடைவில் நாட்டு நாவல் மரங்கள் எண்ணிக்கை குறைந்து பழம் விற்பனையும் குறைந்துள்ளது.

இந்நிலையில், ஆந்திர, கர்நாடக மாநிலங்களிலிருந்து ஜம்பு நாவல் பழங்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு வருகிறது. மருத்துவ குணம் நிறைந்த நாவல் பழத்தைச் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகம் வாங்கிச் சாப்பிட்டு வருகின்றனர்.

நாவல் பழங்கள் ஜூன், ஜூலை மாதங்களில் அறுவடையாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கிலோ ரூ.20 முதல் 50 வரை விற்பனையான நிலையில், தற்போது, ஒரு கிலோ ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக பழ வியாபாரிகள் சிலர் கூறியதாவது: உள்ளூரில் இயற்கையாக விளையும் நாட்டு ரக நாவல் பழங்கள் தற்போது கிடைப்பதில்லை, இதனால், வெளி மாநிலத்தில் விளையும் அதிக சதைப்பற்று உள்ள ஜம்பு நாவல் பழம் ஓசூரில் விற்பனைக்கு வந்துள்ளது.

சீசனுக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே தற்போது நாவல் பழம் விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கத்தை விட விலை உயர்ந்தாலும், பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

ஆப்பிள் பழத்தை விட விலை உயர்ந்துள்ளதால், நடுத்தர மக்கள் வாங்கிச் சாப்பிட முடியாத நிலையுள்ளது. எனவே, நாவல் மரங்களைக் கிராம பகுதி மற்றும் வனப்பகுதியில் அதிக அளவில் நடவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் நாட்களில் சந்தைக்கு நாவல் பழம் வரத்து அதிகரிக்கும் என்பதால், விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in