

மதுரை: நாட்டு மாட்டுச்சாணம், கோமியம் மூலம் கை வேலைப்பாடுகளால் உருவாகும் கோயில் கோபுர சிலைகள், மாவிலை தோரணங்கள் குஜராத்திற்கு அனுப்ப உசிலம்பட்டியில் தயாராகின்றன.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரைச் சேர்ந்தவர் பா.கணேசன் (வயது 53). இயற்கை விவசாயியான இவர் நாட்டு மாட்டுச்சாணம், கோமியம் கலந்து நூற்றுக்கணக்கான மேற்பட்ட கலைப்பொருட்களை கை வேலைப்பாடாகவே உருவாக்கி வருகிறார்.
இதில் நாட்டு மாட்டுச் சாணத்திலிருந்து மாவிலை தோரணங்கள், பூஜை பொருட்கள், விநாயகர், சரஸ்வதி, இயேசு போன்ற கடவுள் சிலைகள், கழுத்தில் அணியும் பாசி மாலைகள், நிறுவனங்களின் இலச்சினை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார். தற்போது குஜராத்திலிருந்து ஆர்டர் வந்ததன் பேரில் கோயில் கோபுர வடிவமைப்பு சிலைகள், மாவிலை தோரணங்கள், விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்து அனுப்பி வருகிறார்.
இதுகுறித்து இயற்கை விவசாயியும், கைவினைக் கலைஞருமான பா.கணேசன் கூறியதாவது: நாட்டு மாடுகள் மூலம் கிடைக்கும் கழிவுகளான சாணம், கோமியத்தை முதலில் இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்துகிறேன். அதில் மிஞ்சும் கழிவுகளை கலைப்பொருட்களை கைகளால் உருவாக்கி விற்பனை செய்து வருகிறேன். இயற்கைக்கு கேடு விளைவிக்காத, பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக உருவாக்கும் மாவிலை தோரணங்கள் வீடுகள், அலுவலகங்களில் வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர்.
மேலும் பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் வகையில் கோயில் கோபுர சிலைகளை குஜராத்திலிருந்து கேட்டுள்ளனர். அதற்காக கடந்த சில நாட்களாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள கோயில் கோபுர சிலை 5 தனித்தனி பாகமாக தயாரித்து ஒருங்கிணைக்க வேண்டும். ஒன்றின் விலை ரூ.600 ஆகும். இதை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் நல்ல மகத்துவம் கிடைக்கும் என்பதால் குஜராத்திலிருந்து விரும்பி கேட்டுள்ளனர்" என்றார்.