குறைந்த பராமரிப்பில் மருத்துவ குணம் நிறைந்த பன்னீர் நாவல் - சர்க்கரை நோயாளிகளுக்கான ‘வாட்டர் ஆப்பிள்’

குறைந்த பராமரிப்பில் மருத்துவ குணம் நிறைந்த பன்னீர் நாவல் - சர்க்கரை நோயாளிகளுக்கான ‘வாட்டர் ஆப்பிள்’
Updated on
2 min read

மதுரை: குறைந்த பராமரிப்பில் மருத்துவ குணம் நிறைந்த ‘வாட்டர் ஆப்பிள்’ எனும் பன்னீர் நாவல் பழம் மதுரை பகுதியில் காய்த்து குலுங்குகின்றன. சர்க்கரை நோயாளிகள் விரும்பும் பழமாக இருப்பதால் நல்ல விலையில் விற்கப்படுகின்றன.

மருத்துவ குணம் நிறைந்த ‘வாட்டர் ஆப்பிள்’ என அழைக்கப்படும் பன்னீர் நாவல் பழம் குறைந்த பராமரிப்பில் வளரும் காட்டுத் தாவரமாகும். இதன் பழங்களோடு இலைகளும் மருத்துவ குணமுடையதால் ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருத்துவத்தில் பயன்படுத்துகின்றனர். இப்பழத்தில் இனிப்பு கலந்த துவர்ப்பு சுவையுடையதால் சர்க்கரை நோயாளிகள் விரும்பி உண்ணும் பழமாக இருப்பதால் இதன் தேவை அதிகமுள்ளது.

மதுரை திருப்பாலை அருகே காஞ்சரம்பேட்டை உசிலம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஆர்.முருகேசன் தனது வயலில் விளைந்த பன்னீர் நாவலை அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறார். ஒரு கிலோ ரூ.150லிருந்து ரூ.200 வரை விற்று லாபம் ஈட்டியும் வருகிறார்.

இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் சு.செந்தூர்குமரன் கூறியதாவது: "வாட்டர் ஆப்பிள்" என பரவலாக அழைக்கப்படும் இதன் பெயர் "பன்னீர் நாவல் அல்லது ஜம்பு நாவல் பழம்" என்பதாகும். இது தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியா, இந்தோனேசியாவிலிருந்து தோன்றி பிலிப்பைன்ஸ், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு பரவியது. இது வெப்ப மண்டலத்திலிருந்து மிதகுளிர் பகுதிவரை கடல் மட்டத்திலிருந்து சுமார் 1600 மீ உயரமுள்ள பகுதிகளில் விளையும்.

இது 3ல் இருந்து 7 மீ உயரம் வரை வளரும். மே மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை பூக்கும். ஆகஸ்ட்டிலிருந்து நவம்பர் வரை பழங்கள் கிடைக்கும். மாற்றாக இப்பருவங்களில் தகுந்த சூழல் இருக்கும்பட்சத்தில் வருடத்தில் இருமுறை பழங்கள் சந்தைக்கு வரும். சதைப்பற்று நிறைந்த பழம். இதிலிருந்து சாற்றை ஜூஸ், ஜாம், ஐஸ்கிரீம்களில் பயன்படுத்துகின்றனர். காய்கள் மினுமினுப்பான இளம்பசுமை நிறத்திலிருந்து இளஞ்சிவப்பு நிறத்திற்கு பழமாக மாறும். இப்பழம் மணி வடிவில் இருப்பதால் "பெல் ஆப்பிள்" எனவும் அழைக்கின்றனர்.

சதைப்பற்று நிறைந்த இப்பழத்தில் உள்ள சத்துக்கள், 100 கிராமில் 90 சதவீதம் நீர்ச்சத்தும், புரதம் 0.6 கிராம், மாவுச்சத்து 5.7 கிராம், நார்ச்சத்து 1.5 கிராம் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியைத்தரும் வைட்டமின் சி - 156 மில்லி கிராம், தெளிவான கண்பார்வைக்குரிய வைட்டமின் ஏ - 22 மில்லி கிராம், சீரான வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான வைட்டமின் பி1 (தயமின்) -10 மில்லி கிராம், வைட்டமின் பி3 (நியாசின்) 5 மில்லி கிராம், எலும்பு மற்றும் பற்கள் உறுதிக்கான கால்சியம் 29 மில்லி கிராம், பாஸ்பரஸ் 8 மில்லி கிராம் உள்ளது. இவை தவிர மெக்னீசியம் 5 மில்லி கிராம், கந்தகச்சத்து 13 மில்லி கிராம், இரும்புச்சத்து 0.1 மில்லி கிராம் உள்ளன.

ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருத்துவத்தில் இதன் பழம், இலைச்சாற்றை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதில் இனிப்புச்சுவை இருந்தாலும் கொழுப்பு, குளுக்கோஸ் பூஜ்யம் சதவீதம் உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இந்தோனேசியாவில் 2021 செப்டம்பரில் நடந்த சர்வதேச கல்வி அறிவியல் மாநாட்டில் மெகாவாட்டி ராடன் தலைமையிலான விஞ்ஞானிகள் , உம்மிஹிராஸ் மற்றும் ஹாபி சுக்கான் குழுவினர் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்துள்ளனர். இதில் இப்பழம் மற்றும் இலைச்சாற்றை வெள்ளை எலிகளுக்கு கொடுத்து பரிசோதித்ததில், கொழுப்புச்சத்து, டிரைகிளிசரைடு இயல்பு நிலையை எட்டியிருக்கிறது. இலைச்சாறில் இருதயக்கோளாறுகளை சீர்படுத்தும் வேதிப்பொருள்களான டானின், டெர்பினாய்டு, பீட்டா சிட்டோஸ்ட்டிரால் ஆகியவையும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல், மலேசியாவிலுள்ள மோனாஷ் பல்கலைக்கழக விஞ்ஞானி உமா பழனிச்சாமி தனது ஆய்வறிக்கையில் இப்பழம் மற்றும் இலைச்சாற்றிலுள்ள ஆல்பா குளுகோசைடு மற்றும் அமைலேஸ் வேதிக்கூறுகளின் செயல்பாட்டால் டைப் 2 வகை சர்க்கரை நோயாளிக்கு கொடுத்ததில் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருந்ததாக ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளார். இப்பழங்களோடு, இலைகளும் மருத்துவ குணமுடையது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in