

மதுரை: அரிய வகை ‘ஏ நெகட்டிவ்’ ரத்தத்ததை 112 முறை அரசு மருத்துவமனைகளில் தானம் செய்தும், பல்வேறு மாவட்டங்களில் குருதிக்கொடை கழகம் மூலம் பல்லாயிரக்கணக்கானோருக்கு உயிர் காக்கும் உதவியை செய்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த 64 வயது முதியவர் பி.வரதராசன்.
மதுரை வடக்கு மாசி வீதியை சேர்ந்தவர் பி.வரதராசன் (64). இவருக்கு அரிதான ஏ நெகட்டிவ் ரத்த வகை உள்ளது. தனது 20 வயதில் ரத்த தானம் செய்யத் தொடங்கியவர் தற்போது 64 வயதில் 112 முறை ரத்த தானம் செய்து பல உயிர்களை காப்பாற்றியுள்ளார். மேலும் தந்தை பெரியார் குருதிக்கொடை கழகம் மூலம் பல மாவட்டங்களில் ரத்த தான முகாம்கள் நடத்தி பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்களை காப்பாற்றும் அறத்தொண்டாற்றி வருகிறார்.
இதுகுறித்து குருதிக்கொடையாளர் பி.வரதராசன் கூறியதாவது: ''ஈவேரா பெரியார் கொள்கை வழி நடப்பவன். சாதி மறுப்பு திருமணம் செய்தேன். பிறருக்கு தொண்டு செய்து மகிழ வைப்பதுதான் உலகில் பெரிய இன்பம் என்றார் பெரியார். அன்றிலிருந்து இன்றுவரை அறத்தொண்டாக ரத்த தானம் செய்து வருகிறேன். 20 வயதில் ரத்த தானம் செய்யத்தொடங்கி இதுவரை 112 முறை ரத்த தானம் செய்துள்ளேன். இதில் 95 முறை அரசு மருத்துவமனைகளிலும் ரத்த தானம் செய்துள்ளேன். எஞ்சிய முறை ஆபத்தான சூழலில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு ரத்த தானம் செய்துள்ளேன்.
இதில் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த வைதீக முறையைப் பின்பற்றும் பெரியவர் ஒருவருக்கு ஆபத்தான நிலையில் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ரத்த தானம் செய்தேன். அவர் குணமடைந்து வீட்டுக்கு சென்றபின் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பெரியாரின் கொள்கையை பின்பற்றும் உங்களது ரத்தம் தான் என்னை காப்பாற்றியது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அதேபோல், தலசீமியா நோயால் பாதித்த 12 வயது குழந்தை 3 நாளில் இறந்துவிடும் என்று அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர். அக்குழந்தைக்கு நான் ரத்தம் கொடுத்ததால் 15 நாள் உயிருடன் வாழ்ந்தது என்னை பாதித்த சம்பவமாகும்.
தற்போது நோய் நொடியின்றி ஆரோக்கியமாக உள்ளேன். மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் ரத்த தானம் செய்துவருகிறேன். மதுரை மாவட்டத்தில் ரெட் கிராஸ் அமைப்பைச் சேர்ந்த ஜோஷ் என்பவர் 156 முறை ரத்த தானம் செய்து முதலிடத்தில் உள்ளார். நான் 112 முறை தானம் செய்து மாவட்டத்தில் 2-ம் இடத்தில் உள்ளேன். பல்வேறு மாவட்டங்களில் தந்தை பெரியார் குருதிக்கொடை கழகம் மூலம் பல ஆயிரக்கணக்கானோருக்கு ரத்த தானம் செய்து வருகிறோம். எங்களது சேவையை அரசு சார்பிலும் மற்றும் பொதுநல அமைப்பினரும் பாராட்டி வருகின்றனர்'' என்றார்.