

“உங்களுக்கு என் பெயர்கூட தெரிந்திருக்காது. ஆனால் பிடிஎஸ் ( BTS), ப்ளாக் பின்ங் (BLACKPINK)-ஐ தெரியாமல் இருந்திருக்காது” என்று அமெரிக்க பயணத்தில் தென்கொரிய அதிபர் யூன் சுக் யேல் பேசியிருந்தார். பிடிஎஸ் - ப்ளாக் பின்க் , உலக அளவில் இன்றைய இளைய தலைமுறைகள் தூக்கி கொண்டாடும் இசை குழுக்களாக இருக்கின்றன என்று கூறினால், அதில் மிகை எதுவுமில்லை. சினிமா, பாப் இசை குழுக்கள், நாடகங்கள் மூலம் ஒரு நாட்டின் கலாச்சாரத்தை உலகளவில் கொண்டு செல்ல முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக தென் கொரியா இருந்திருக்கிறது.
குறிப்பாக, கொரியாவில் இசைக்குழு உருவாக்க பின்னணியில் பெரும் பயிற்சி முறை இருக்கிறது. பொழுதுபோக்குத் துறை சார்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் முதலீடுகள் மூலம், இளம் தலைமுறையின் நடனம், பாடும் திறமைகள் கண்டறிந்து குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டு போட்டிக் களத்தில் இறக்கப்படுகின்றன. இந்த இசைக் குழுக்களில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் (குறிப்பாக எந்த நாட்டில் கொரிய பாப் குழுவிற்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த நாட்டை சேர்ந்தவர்கள்) இடம்பெற்றிருக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு ஷேர்யா, ஆரியா போன்ற இந்தியாவை சேர்ந்த இளம் பெண்களும் கே-பாப்பில் இணைந்து பாப் புகழ் வெளிச்சத்துக்குள் நுழைந்துள்ளனர். நிச்சயம் இவை எல்லாம் வரவேற்க கூடியவைதான்.
ஆனால், புகழ் எவ்வளவு உயரத்தை அளிக்கிறதோ, அதே அளவு சர்ச்சைகளையும், சரிவுகளையும் அளிக்கும். அதுதான் தென் கொரிய பாப் உலகில் கடந்த சில வருடங்களாக நடந்தேறி கொண்டிருக்கிறது. பாப் இசை குழுக்களில் உள்ள நிர்வாக கெடுபிடிகள், ஐடியல் ப்யூட்டி கோட்பாடுகள் போன்ற அழுத்தங்களுக்கு இடையேதான் கே-பாப் பிரபலங்கள் இயங்கி வருவதாக கொரிய ஊடகங்கள் கூறுகின்றன. இதில் சில நேரங்களில் இசைக் குழுகளில் உள்ளவர்கள் நிர்வாகத்தில் உள்ளவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது, அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தங்களையே மாய்த்துக் கொண்ட நிகழ்வுகளும் நடந்தது கே-பாப் உலகின் கறுப்பு பக்கங்கள் எனக் கூறலாம்.
இதிலிருந்து சற்று மீண்டு வந்த கொரிய திரை உலகமும், பாப் உலகமும் தற்போது மன அழுத்த நெருக்கடிகளிலும், சமூக வலைதள வசைகளிலும் சிக்கித் தவிக்கிறது. அந்த வகையில் கொரிய பாப் உலகத்தை சமீபத்திய ஆண்டுகளில் அதிர்ச்சிக்கு உண்டாக்கிய மரணம், ஜோ யூன் உடையது.
ஷைனி இசைக் குழுவில் இருந்த ஜோ யூன் புகழின் உச்சியில் இருக்கும்போது தீவிர மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து சூலியின் தற்கொலை நிகழ்ந்தது. சூலி கொரியாவின் பிரபலமான 'fx' என்ற இசைக் குழுவின் மூலம் கொரிய பாப் உலகிற்கு அறிமுகமானார். பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். எதையும் தைரியமாக வெளிப்படையாக பேசும் சூலிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருந்தார்களோ, அதே அளவு வெறுப்பாளர்களும் இருந்தார்கள். சூலியின் ’நோ பிரா’ (NO BRA) பிரச்சாரம் காரணமாக அவர் சமூக வலைதளத்தில் மோசமாக விமர்சிக்கப்பட்டார். அதன் முடிவில் சூலியும் தற்கொலை செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து சூலியின் நெருங்கிய தோழியும், கே-பாப் உலகின் பிரபலமாக இருந்த கோ ஹாராவும் தற்கொலை செய்துகொள்ள, சாங் யோ ஜங், சா இன் ஹா என கொரிய பிரபலங்களின் தற்கொலை சங்கிலிப் பிணைப்புபோல் நீண்டது கொரிய மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த நிலையில்தான் இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஆஸ்ட்ரோ பாப் இசை குழுவின் மூன் பின் தற்கொலை செய்துகொண்டார். தீவிர மன அழுத்தத்தின் காரணமாக மூன் பின் தற்கொலை செய்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. எனினும் அவரது தற்கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து கே-பாப் பிரபலங்கள் பலரும் மன அழுத்தங்கள், தனிமை , எதிர்கால பயம், மனநலத்தின் தேவை குறித்து வெளிப்படையாக பேச தொடங்கி, தற்போது அது விவாதமாக மாறியுள்ளது. போட்டி கலாச்சாரத்துக்கு பெயர் பெற்ற தென் கொரியாவில் , பிரபலங்கள் மட்டுமல்ல, பொது மக்களிடையேயும் சமீப ஆண்டுகளில் தற்கொலை செய்து கொள்ளும் சதவீதம் அதிகரித்து வருகிறது. வளர்ந்த நாடுகளிலே இளைஞர்கள் அதிகளவில் தற்கொலை செய்துகொள்ளும் நாடாக தென் கொரியா உள்ளது.
சமூக அழுத்தத்தினால் புகழை நோக்கி ஓடும் ஓட்டப் பந்தயத்தில், அதன் உச்சியை அடைந்ததும் ஒருகட்டத்தில் வெறுமை சுழும்போது, சிலர் சீட்டுக்கட்டுகள் போல் சரிவார்கள். கொரிய பிரபலங்களும் இதனை நோக்கி கடந்த சில ஆண்டுகளாக தள்ளப்பட்டிருக்கிறார்கள். எனினும், துயரத்திலும் சிறு வெளிச்சமாக, கொரியாவில் நிலவும் போட்டி கலாச்சாரத்தையும், சமூக வசைவுகளையும் நோக்கி இளைய தலைமுறைகள் கேள்வி எழுப்பும் சூழலை இந்தப் பிரபலங்களின் தற்கொலை உருவாக்கி கொடுத்திருக்கிறது.
புகழுக்கு மத்தியில் மனநலமும் அத்தியாவசியம் என்பதை கொரிய பாப் உலகமும் உணரத் தொடங்கி இருப்பது கூடுதல் ஆறுதல் செய்தி!
தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in