Published : 04 May 2023 02:51 PM
Last Updated : 04 May 2023 02:51 PM

வாட்ஸ்அப் குழு மூலம் சுகாதார சேவை: சிறந்த செவிலியர் விருதுக்கு ச.ஜெயலட்சுமி தேர்வு

இந்த ஆண்டு (2023) உலக செவிலியர்கள் நாளில் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தின் சார்பில் சென்னை ஆவடியை அடுத்த வெள்ளானூர் கிராம சுகாதார செவிலியர் ச.ஜெயலட்சுமியும் சிறந்த செவிலியர் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச செவிலியர் தினம் மே 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. செவிலியர்களின் முன்னோடியாக விளங்குபவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். கைவிளக்கு ஏந்திய காரிகை என்று போற்றப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த மே 12-ந் தேதி சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம், நர்சிங் மாணவர்களிடம் பேசும்போது ஒருமுறை கூறினார்: “நான் மருத்துவர்களைப் பார்க்கும்போது, வலி நீக்கிகளைப் பார்க்கிறேன். பல் மருத்துவர்களைப் பார்க்கும்போது, மனிதர்களின் முகத்தில் புன்னகை வருபவர்களைப் பார்க்கிறேன். செவிலியர்களைப் பார்க்கும்போது, பவுர்ணமி இரவில் தேவதைகள் நடமாடுவது நினைவுக்கு வருகிறது. ஒரு மருத்துவமனையில், இரவு நேரங்களில் மருத்துவர்கள், உறவினர்கள் யாரும் இல்லாதபோது, செவிலியர்கள் ஆறுதல் மற்றும் நிவாரணம் வழங்குகிறார்கள். அந்த நேரத்தில், செவிலியர்கள் தேவதைகளாகத் தோன்றுகிறார்கள்” என்று கூறியிருந்தார்.

இந்த ஆண்டு (2023) உலக செவிலியர்கள் நாளில் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தின் சார்பில் சென்னை ஆவடியை அடுத்த வெள்ளானூர் கிராம சுகாதார செவிலியர் ச.ஜெயலட்சுமியும் சிறந்த செவிலியர் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சுகாதாரத் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றுவதில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானது. கடந்த 3 ஆண்டுகளாக தாய் - சேய் நல வாட்ஸ் அப் குழு மூலம் தன் பகுதி கருவுற்ற தாய்மார்களுக்கு நலக்கல்வியையும் விழிப்புணர்வினையும் தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறார். இதன் மூலம் சுகாதார சேவைகளை சிறப்பாகவும் பொதுமக்கள் பயன்பெறும் வண்ணமும் செய்து மக்களின் பாரட்டினை பெற்று வருகிறார். இந்தக் குழுவின் மூலம் தன் பகுதியில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களின் வாட்ஸ்அப் எண்களைச் சேகரித்து, தடுப்பூசி போடும் தேதி, நேரம் மற்றும் இடம் போன்ற தகவல் தொடர்புகளை ஒழுங்குபடுத்தவும் கண்காணிக்கவும் செய்கிறார்.

இவர் பணிபுரியும் சுகாதார நிலைய பகுதிகளில் பெண்களிடையே தன் சுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் ,குறிப்பாக கருவுற்ற தாய்மார்களிடையே பேறுகால முன் பராமரிப்பு மற்றும் சுகப்பிரசவத்திற்கு மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்து அவர் ஆற்றிவரும் பணி பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.

நோயாளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தை கவனித்துக்கொள்வதில் இந்த செவிலியர் எடுத்துகொள்ளும் தனிக்கவனத்தினை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அவருடைய சிற்ப்பான பணிகள் ஒரு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டி விருதும் பெற்றுள்ளார், அவர் பகுதி பொதுமக்கள் அவரை செவிலியர் அம்மா, சகோதரி, ஜெயா அக்கா என அன்புடன் அழைக்கின்றனர்.

சுகாதார தொடர்பான பல்வேறு வீடியோக்கள், ஊட்டச்சத்து செய்திகள், இயல்பான பிரசவத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் யோகா பயிற்சிகள் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம், RCHID அட்டை மற்றும் அதன் முக்கியத்துவம் போன்றவற்றை தனது சொந்த வீடியோ வெளியிட்டு நோயாளிகள் மற்றும், கர்ப்பிணி தாய்மார்களின் அச்சத்தை போக்கி அவர்களுக்கு நேர்மறை எண்ணத்தை உண்டாக்கி ஊக்கப்படுத்தி வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x