

சண்டிகர்: பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஹரியாணாவில் ஒரு சிறிய கிராமத்தில் தொடங்கப்பட்ட ‘‘மகளுடன் செல்பி’’ பிரச்சாரம் பிரதமர் மோடியின் முன்னெடுப்பால் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இதன் காரணமாக, பாலின விகிதத்தில் காணப்பட்ட மிகப்பெரிய அளவிலான வேறுபாடு குறைந்துள்ளதாக இந்த செல்பி திட்டத்தை முதன் முதலாக தொடங்கிய சுனில் ஜக்லன் நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பெண் சிசுக்கொலை போன்ற பெண் குழந்தைகளுக்கு எதிரான தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஹரியாணா வின் ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள பிபிபூர் கிராமத்தில் கடந்த 2015-ம்ஆண்டு ‘‘மகளுடன் செல்பி’’ பிரச்சாரத்தை தொடங்கினேன்.
இந்த முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி அவரது மன் கி பாத் நிகழ்ச்சியில் மிகவும் பாராட்டியதோடு ஒவ்வொரு இந்தியரும் தங்களது மகள்களுடன் செல்பி எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யுமாறு வலியுறுத்தினார்.
இந்த திட்டம் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமரின் முன்னெடுப்பால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. உலகின் பல பகுதிகளிலிருந்தும் இதற்கு ஆதரவு பெருகியுள்ளது.
குறிப்பாக, எனது சொந்த மாவட்டமான ஹின்டில் பாலின விகிதம் மிகவும் மோசமாக இருந்தது. ஆனால், தற்போது ஹரியாணா மாவட்டங்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்த திட்டம் பல இடங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பெண் குழந்தைகளுக்கு எதிரான மக்களின் மனநிலையில் மாற்றத்தை கொண்டுவர உதவியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 2015-ல் ‘‘பெண் குழந்தைகளை காப்போம்- பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்’’ பிரச்சாரம் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த முயற்சிக்கு துணையாக இருக்க உறுதிபூண்டுள்ளேன். இவ்வாறு சுனில் ஜக்லன் தெரிவித்தார்.