

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் நல்லூர் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, நேற்று 3-ம் ஆண்டு எருது விடும் விழா நடந்தது. இதில், 250-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
விழாவில் பங்கேற்க சூளகிரி, பேரிகை, ஓசூர், ராயக்கோட்டை, நல்லூர், தேன்கனிக்கோட்டை, பர்கூர், காவேரிப்பட்டணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்தும், ஆந்திர, கர்நாடக மாநில கிராமங்களிலிருந்தும் 250-க்கும் மேற்பட்ட காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்தனர்.
முன்னதாக கோ பூஜை நடந்தது. பின்னர் வாடிவாசல் வழியாகக் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. குறிப்பிட்ட தூரத்தைக் குறைந்த விநாடிகளில் கடந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக ரூ.1 லட்சம் உள்ளிட்ட 50 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவைக் காண சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். இதையொட்டி, வேப்பனப்பள்ளி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.