

கும்பகோணம்: கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகில் வட்டார பொது சுகாதாரப்பணிகள் சார்பில் உலக மலேரியா தினத்தை யொட்டி நூதன முறையிலான விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு கும்பகோணம், ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ரோசாரியா, தலைமை வகித்தார். பட்டீஸ்வரம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் என்.சங்கரன் தனது கையில் மாதிரி அணாபிளஸ் கொசுவின் உருவத்தை ஏந்தியபடி முழக்கமிட்டார். பின்னர் அவர் கூறும்போது, ”மலேரியா காய்ச்சல் என்பது ஒரு வகை அணாபிளஸ் கொசுக்கள் கடிப்பதன் மூலம் பரவுகிறது. இவ்வகையான கொசுக்கள் சுத்தமான நீர் நிலைகள் மட்டுமே வளரக் கூடியது, மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 முதல் 7 நாட்களுக்கு தொடர்ச்சியான காய்ச்சல், உடல் வலி குளிருடன் கூடிய நடுக்கம் இருக்கும். அவர்கள் உடனடியாக, ஆரம்ப சுகாதார நிலையத்தையோ, அரசு மருத்துவமனையையோ அணுகி சிகிச்சை பெற வேண்டும். அங்கு இலவசமாக ரத்தப் பரிசோதனையும், சிகிச்சையும் வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
சுகாதார ஆய்வாளர்கள் கோமதி, விக்னேஷ், அஸ்வின் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியாளர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மலேரியா இல்லாத நிலையை அடைய புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவோம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.