உலக புத்தக தினத்தை முன்னிட்டு அரசு பள்ளிக்கு 600 புத்தகங்கள்: சமூக வலைதளங்கள் மூலம் தானமாக பெற்ற மாணவர்கள்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பொள்ளாச்சி: அரசு பள்ளி நூலகத்துக்கு சமூக வலைதளங்கள் மூலமாக 600 புத்தகங்களை தானமாக பெற்று மாணவர்கள் வழங்கினர். உலக புத்தக தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி அருகேயுள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர் நிலைப் பள்ளியின் நூலகத்துக்கு சமூக வலை தளங்கள் மூலமாக மாணவர்களால் புத்தக தானம் கேட்கப்பட்டது.

இதற்கு கல்வியாளர்கள், பொதுமக்கள், பெற்றோர்களால் சுமார் 600 புத்தகங்கள் வழங்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட புத்தகங்கள் பள்ளி வராண்டாவில் காட்சிப்படுத்தப்பட்டன. மாணவர்கள் இந்த புத்தகங்களில் இருந்து தங்களுக்குத் தேவையான புத்தகங்களை தேர்வு செய்து, மாலை 4 மணி முதல் 5 மணி வரை பள்ளியின் மைதானத்தில் உள்ள மரங்களுக்கு கீழே வரிசையாக அமர்ந்து வாசிக்கத் தொடங்கினர்.

இந்த ஒரு மணி நேர வாசிப்புக்கு பிறகு குழந்தைகள் தாங்கள் படித்ததை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் தலைவர் அம்சபிரியாவிடம் பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பாக புத்தகங்கள் வாசித்த மாணவர்களுக்கு ஆர்டூஆர் அறக்கட்டளையின் கொங்குவேள் மணிவண்ணன் அப்துல் கலாமின் புகைப்படங்கள் மற்றும் அப்துல்கலாம் எழுதிய நூல்களை பரிசாக வழங்கினார்.

இந்த நிகழ்வை பள்ளித் தமிழாசிரியர் பாலமுருகன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சுடலைமுத்து ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதேபோல, ஜோதிநகரில் உள்ள படிகள் படிப்பகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கவிஞர்கள் புன்னகை பூ ஜெயக்குமார், ரா.பூபாலன், சுடர்விழி, சோலைமாயவன் ஆகியோர் பேசினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in