Published : 25 Apr 2023 06:19 AM
Last Updated : 25 Apr 2023 06:19 AM
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நான்கு நாள் நெய்தல் கலை விழா வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி. அமைச்சர் பெ.கீதாஜீவன் உள்ளிட்டோர் கண்டுகளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட மக்கள் மத்தியில் வாசிக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் 11 நாள் புத்தகத் திருவிழா கடந்த 11-ம் தேதி தொடங்கியது.
தூத்துக்குடி- எட்டயபுரம் சாலை, சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் தினமும் மாலையில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் கலந்து கொண்டு வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றுகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. வரும் 28-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை நெய்தல் கலைத்திருவிழா நடைபெறுகிறது. இதில் 400-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்த நிலையங்களில் இருந்து புத்தகத் திருவிழா நடைபெறும் திடலுக்கு இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலையில் கனிமொழி எம்.பி. தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புத்தகத் திருவிழா திடலுக்கு பேருந்தில் புறப்பட்டு சென்றார். பேருந்தில் பயணித்த மக்களிடம் புத்தகத் திருவிழா குறித்து விளக்கி கூறி, விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அவருடன் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் கி. செந்தில் ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் ஆகியோரும் பேருந்தில் பயணம் செய்தனர். பின்னர் புத்தகத் திருவிழா நிகழ்ச்சிகளை அவர்கள் பார்வையிட்டனர்.
இசை நிகழ்ச்சி: வரும் 28-ம் தேதி முதல் 1-ம் தேதி வரை நெய்தல் நடைபெறவுள்ள நெய்தல் கலைத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சென்னையை சேர்ந்த 'ஆன் த ஸ்ட்ரீட்ஸ் ஆப் சென்னை' இசைக்குழுவினர் நடத்திய இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு படகில் நின்று இசைக் கலைஞர்கள் இசை நிகழ்ச்சியை நடத்தினர். இதனை எம்.பி, அமைச்சர், எம்எல்ஏ, ஆட்சியர் மற்றும் திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT