Published : 22 Apr 2023 06:48 AM
Last Updated : 22 Apr 2023 06:48 AM
புதுடெல்லி: இட்லி, தேநீர், மஞ்சள் உள்ளிட்ட உணவு வகைகளால் இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று உயிரிழப்பு வெகுவாகக் குறைந்தது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 68.58 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 11.5 லட்சம் பேரும், இந்தியாவில் 5.31 லட்சம் பேரும் உயிரிழந்து உள்ளனர். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனா உயிரிழப்பு குறைவாகவே இருக்கிறது. இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வு மேற்கொண்டது.
ஐசிஎம்ஆர் முன்னாள் தலைவர் நிர்மல்குமார் கங்குலி தலைமையில் சுவிட்சர்லாந்து, பிரேசில், சவுதி அரேபியா, ஜோர்டான் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வுகளை நடத்தினர். அவர்களின் ஆய்வறிக்கை ஐசிஎம்ஆர் மருத்துவ இதழில் அண்மையில் வெளியானது. அதில் கூறியிருப்பதாவது:
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை மிகவும் குறைவு. ஆனால் அந்த நாடுகளில் கரோனா தொற்றால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருந்தபோதிலும் கரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்கு இந்தியர்களின் உணவுப் பழக்க, வழக்கங்களே முக்கிய காரணம்.
மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள், இந்தியர்களைவிட 20 மடங்கு அதிகமாக இறைச் சியை சாப்பிடுகின்றனர். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், பால்பொருட்கள், மீன், மதுபானம் ஆகியவற்றையும் இந்தியர்களைவிட அதிகமாக உட்கொள்கின்றனர்.
4 மடங்கு காய்கனி..
ஆனால் இந்தியர்கள், மேற்கத்திய மக்களைவிட 4 மடங்கு அதிகமாக காய்கனிகளை சாப்பிடுகின்றனர். நாளொன்றுக்கு 1.2 கிராம் அளவுக்கு தேநீர் குடிக்கின்றனர். 2.5 கிராம் அளவுக்கு மஞ்சளை உணவு வகைகளில் சேர்க்கின்றனர். இதன் காரணமாக இந்தியர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
தென்னிந்திய மக்கள் இட்லி, சாம்பாரையும், வடஇந்திய மக்கள் ராஜ்மா அரிசி சாதத்தையும் விரும்பி சாப்பிடுகின்றனர். இத்தகைய உணவு வகைகளால் இந்தியர்களின் ரத்தத்தில் இரும்பு, ஜிங்க் சத்து அதிகரிக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால் இந்தியர்களின் உணவுப் பழக்க, வழக்கத்தால் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கரோனா வைரஸ் தொற்று உயிரிழப்பு வெகுவாகக் குறைந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT