Published : 21 Apr 2023 08:20 PM
Last Updated : 21 Apr 2023 08:20 PM
12 மணி நேர வேலையை உயிர்ப்புடன் செய்வது எப்படி தெரியுமா? - சட்ட மசோதாதானே நிறைவேறியது அதற்குள் ஆலோசனையா என்று கேட்பவர்களுக்கு அதற்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொண்டு தொடர்வோம். 12 மணி நேரம் சோர்வில்லாமல் வேலை செய்வது எப்படி என்று கூகுளிடம் முதலில் ஆலோசனைக் கேட்டால் 6 ஆலோசனைகளை வழங்கியது. அவை:
1. வேலைக்குச் செல்லும் முன்னரே உங்கள் ஷிஃப்டை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அது நீங்கள் சீட்டில் அமர்ந்தவுடன் ஏற்படும் நெருக்கடியைக் குறைக்கும்.
2. ஆரோக்கியமான தூக்க பழக்கவழக்கம் மேற்கொள்ளுங்கள்.
3. வீட்டிலிருந்தே சமைத்து உணவைக் கொண்டு வரவும்.
4. உங்களுக்குக் கிடைக்கும் பிரேக்குகளை சாதுர்யமாகப் பயன்படுத்துங்கள்
5. விடுமுறையை திட்டமிடுங்கள்
6. உங்கள் ஓய்வு தினத்தையும் திட்டுமிடுங்கள்.
இப்படித்தான் கூகுள் டிப்ஸ் சொல்கிறது. ஆனால், எழுத்தாளரும், மக்கள் தொடர்பு அதிகாரியுமான மேகன் 12 மணி நேர வேலையை எப்படி மகிழ்ச்சியாக செய்வது என்பது பற்றி நகைச்சுவையுடன் சில டிப்ஸ் வழங்கியுள்ளார். 360 டிகிரி வேறாக இருக்கும் இந்த டிப்ஸ் சுவாரஸ்யமானதாகவே தெரிகிறது.
சில நேரங்களில் நம் வேலைகளை நேர்த்தியாக முடிக்கவும், சரியாக முடிக்கவும் கூடுதல் நேரம் தேவைப்படும். ஆனால் அடுத்தநாள் விடுமுறையாக இருந்தால் அலுவலகத்தில் இரவு 11 மணி வரை அமர்ந்து கொண்டு வேலை செய்வதும், பசிக்கு ஏசியில் குளிர்ந்தபோன உணவை அருகில் வைத்து கொரிப்பதும், வெளியே செல்லலாமா எனக் கேட்டு நண்பர்களிடமிருந்து வரும் குறுந்தகவல்களைக் கண்டும் காணாமல் கடப்பதும் சலிப்பூட்டுவதாகத் தான் இருக்கும்.
அப்படியான நேரங்களை அலுவலகப் பணியில் தவிர்க்க முடியாது. ஆனால், அதற்கு ஒரு தீர்வு இருக்கிறது எனக் கூறுகிறார் மேகன். அப்படியான தருணங்களை எப்படிக் கையாள்வது எனக் கூறும் மேகன் அதைமட்டும் பழகிக் கொண்டால் 12 என்ன 16 மணி நேரம் கூட அலுவலகத்தில் இருக்கலாம் என்கிறார்.
1. ஒர்க் அவுட் செய்வதை நிறுத்திவிடுங்கள் - ஒர்க் அவுட் செய்வது பிடிக்காமலேயே தான் நம்மில் நிறைய பேர் ஜிம்முக்கு செல்வோம். அதனால் முதலில் ஒர்க் அவுட்டை கட் செய்துவிட்டால் அந்த ஒரு மணி நேரம் உங்கள் வேலைக்காக கிடைத்துவிடும். ஒருவேளை நீங்கள் ஒர்க் அவுட் பிரியராக இருந்து அதை விடுக்க மனம் இல்லாதவராக இருந்தால் அலுவலகத்திலிருந்து தடுக்கிவிழுந்தால் இருக்கும் ஜிம்முக்கு செல்லவும். ஒர்க் அவுட் செய்யும்போதே அலுவலக வேலையை எப்படி செய்வது என்பதை திட்டமிட்டுக் கொண்டே ஒர்க் அவுட் பண்ணலாம்.
2. சமையல் செய்யாதீர்கள்... - சமையல் அதிகப்படியான நேரத்தை எடுத்துக் கொள்ளும் என்பதால் சமையலை துறந்துவிடுங்கள். ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் எல்லாம் அதற்காகத்தானே இயங்குகின்றன. சமையலைவிடுத்து அவர்களுக்கு வாழ்வு கொடுக்கலாம். ஏனெனில் சமையல் செய்து கொண்டே டைப் செய்வது கடினம். வேலையைத் தடுக்கும், தட்டச்சு செய்வதற்கு இடையூறாக இருக்கும் எதை வேண்டுமானாலும் வெட்டிவிடலாம் என்பதே இதன் அர்த்தம்.
3. பணியிடத்திலேயே நண்பர்களைத் தேடுங்கள் - இது ரொம்பவும் ஈஸி. உங்கள் வேலை தான் உங்கள் வாழ்வாதாரம் என்றாகிவிட்டால் வேலையிடத்தில் உள்ள நண்பர்கள் தான் உங்களின் உயிர் நண்பர்களாக இருக்க வேண்டும். இதற்காக மெனக்கட வேண்டாம். அது இயல்பாகவே அமைந்துவிடும். உங்களுக்கு ஏற்கெனவே சில நண்பர்கள் இருந்தால் உங்களின் திடீர் போக்கு அவர்களுக்கு புதிராகவே இருக்கும். ஆனாலும் நீங்கள் வெளியில் சென்று அவர்களுடன் நேரத்தை விரயம் செய்ய வேண்டாம் என்பதால் அப்படியே கட் செய்துவிடலாம்.
4. கொஞ்சமா தூங்குங்க.. - இப்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குப் புரிகிறது. சரியாகத் தூங்கவில்லை என்றால் சரியாக இயங்கமுடியாது. அது வேலையின் தரத்தில் எதிரொலிக்கும் என நீங்கள் கூறலாம். ஆனால் உண்மையில் நீங்கள் உங்களையே கொஞ்சமாக கொஞ்சமாக பழக்கப்படுத்தினால் அதாவது ஒவ்வொரு மூன்று நாளும் ஒரு மணி நேரத் தூக்கத்தை குறைத்துப் பழகினால் 2 முதல் 3 மணி நேரம் தூங்கினால் போதும் என்ற நிலைக்கு நீங்கள் பழகிவிடுவீர்கள்.
5. அலுவலகத்திலோ அல்லது நெருங்கிய வட்டாரத்திலோ டேட்டிங்குக்கு ஆள் தேடிக் கொள்ளுங்கள் - டேட்டிங் என்றால் நம் பார்ட்னருக்கு நேரம் செலவிட வேண்டும். 12 மணி நேரம் வேலை செய்யும்போது நேர விரயத்தைத் தடுக்க அலுவலகத்திலேயே தெரிந்த நபரை டேட் செய்யலாம். இது கொஞ்சம் அபத்தமாகத் தோன்றினால் கொஞ்சம் சிந்தித்து அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்திலேயே பக்கத்து ஆஃபீஸ் நபரை டேட் செய்யலாம். இல்லாவிட்டால் அருகிலுள்ள காபி ஷாப்பில் இருக்கும் நபரை டேட் செய்யலாம்.
6. பொழுதுபோக்கு கட் - உங்களுக்கென்று பிரத்யேகமாக ஏதேனும் பொழுதுபோக்கு பழக்கங்கள் இருந்தால் மறந்துவிடுங்கள். துறந்துவிடுங்கள். மாறாக அலுவலகத்தைத் தவிர்த்து சுத்தம் செய்தல், லாண்ட்ரி, அலுவலகத்திற்கு வந்து போதல் போன்றவற்றையே நல்லதொரு பொழுதுபோக்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது ஒரு ட்ரிக். உங்கள் மனதை நீங்களே சமாதானப்படுத்திக் கொள்ளலாம். துவைக்கும்போது பாட்டுகேட்டு ரிலாக்ஸ் ஆயிட்டேன்... சமைக்கும்போது சின்ன டான்ஸ் ஆடி ஆசுவாசப்படுத்திக் கொண்டேன் என்று தட்டிக் கொடுத்துக் கொள்ளலாம்.
என்னங்க சொல்றீங்க... எல்லாமே அபத்தமாக இருக்கே என்று நீங்கள் கேட்டால், நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டுமென்றால் சில தியாகங்களை செய்ய வேண்டும் கொஞ்சம் வருந்த வேண்டும் என்பதுதான் உண்மை. ஆனால், இந்த டிப்ஸ் எல்லாம் எப்போதாவது ஒரு ப்ராடக்ட் லாஞ்சுக்கான ஆயத்தம், டெட்லைன் எதிர்கொள்ளும் காலத்திற்கே பொருந்தும்.
அதனால் இதை நீண்ட காலம் செய்யவே செய்யாதீர்கள். இவ்வாறு மேகன் வேடிக்கையாகவே முக்கியமாக விஷயத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். சிரிப்பதோடு சிந்திக்கவும் வைக்கின்றன மேகனின் ஆலோசனைகள்.
உறுதுணைக் கட்டுரை: https://www.themuse.com/ தளத்தில் இருந்து. | தமிழில்: பாரதி ஆனந்த்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT