கும்பகோணத்தை பூர்விகமாகக் கொண்ட புற்றுநோய் நிபுணருக்கு அமெரிக்க அதிபர் விருது
கும்பகோணம்: கும்பகோணத்தை பூர்விகமாகக் கொண்டவரும், சிறந்த புற்றுநோய் மருத்துவருமான சு.திருஞானசம்பந்தத்துக்கு, அமெரிக்க அதிபரின் அலுவலகம் அண்மையில் விருது வழங்கிக் கவுரவித்துள்ளது.
மனித உயிர்களின் நலனுக்காக மருத்துவர் சு.திருஞானசம்பந்தம் ஆற்றிவரும் வாழ்நாள் சேவையைப் பாராட்டி, அதனைச் சிறப்பிக்கும் வகையில், 2023-ம் ஆண்டிற்கான அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும், அமெரிக்க அதிபரின் பாராட்டுச் சான்றிதழையும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் வீசே .திருஞானசம்பந்தத்துக்கு வழங்கி கவுரவித்துள்ளார்.
இவ்விருதை பெற்ற மருத்துவர் சு.திருஞானசம்பந்தம், கும்பகோணத்தை பூர்விகமாகக் கொண்டவர். கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்கா நாட்டில் மருத்துவப் பணி செய்து வருகிறார். இவர் 100 ஆண்டு பழமையான கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரும், இப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய சுந்தரேசன் செட்டியாரின் மகனாவார். இவர் பக்தி இலக்கியத்திலும், திருக்குறள் போன்ற நீதி இலக்கியத்திலும் ஈடுபாடு உடையவர். அமெரிக்காவிலுள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்குப் பெருங்கொடை வழங்கி துணை நின்றவர்.
இது குறித்து அப்பள்ளி தலைமையாசிரியர் வை. சாரதி கூறியது: ”கும்பகோணத்தை பூர்விகமாகக் கொண்ட சு.திருஞானசம்பந்தம், அமெரிக்கா நாட்டில் விருது பெற்றுள்ளது, தமிழகத்துக்கு மட்டுமில்லாமல், இந்தியாவிற்கே பெருமையாகும். எங்கள் பள்ளியில் படித்த மாணவர், இவ்விருதை பெற்றது 100 ஆண்டுகள் பழமையான எங்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் இங்கு வரும்போது, மிகப்பெரிய அளவில் பள்ளியின் சார்பில் பாராட்டு விழாவும், அவரை கவுரவிக்கும் நிகழ்ச்சியும் நடத்த முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
