

பெங்களூரு: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான நடப்பு சீசனுக்கான லீக் போட்டி கடந்த திங்கள் (ஏப்ரல் 17) அன்று பெங்களூருவில் நடைபெற்றது. இந்தப் போட்டியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு திரண்டிருந்தனர். இதில் தோனியின் ரசிகர்களும் அடங்குவர். அவர்களில் தோனியின் ‘வெறித்தன’ ரசிகர்களும் அடக்கம்.
அந்த வெறித்தன ரசிகர்களில் கோவாவைச் சேர்ந்த ரசிகர் ஒருவரும் போட்டியை பார்க்க வந்ததாகத் தெரிகிறது. ‘தோனியைப் பார்க்க தனது பைக்கை விற்றுவிட்டதாகவும். தான் கோவாவில் இருந்து வந்துள்ளதாகவும்’ அவர் கையில் தாங்கிப் பிடித்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அது நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. பலரும் இது குறித்து தங்கள் கருத்தைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த ரசிகரின் படம் சமூக வலைதளங்களிலும் வலம் வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் கடைசி சீசனாக இது இருக்குமோ? என்ற பேச்சு ஒரு பக்கம் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தோனி உடன் விளையாடிய வீரர்கள், தற்போது விளையாடி வரும் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் அவர் செல்லும் இடமெல்லாம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறார். சென்னை மட்டுமல்லாது குஜராத், மும்பை, பெங்களூரு போட்டிகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
தோனிக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் கிரேஸ் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளை அதிகளவிலான பார்வையாளர்கள் பார்க்கின்றனர். இது மைதானத்தில் நேரடியாக மட்டுமல்லாது தொலைக்காட்சி, டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் என அனைத்திலும் அடங்கும்.