

புதுடெல்லி: ஜெர்மனியின் முன்சென் மாநகரில் வாழும் தமிழ் மக்களை ஒருங்கிணைத்து இந்த ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி முன்சென் தமிழ்ச் சங்கம் கலை விழாவினை நடத்தியது.
வழக்கமாக பிரம்மாண்டமாக நடைபெறும் முன்சென் தமிழ்ச் சங்க விழாக்களின் பாணியில் கூடுதல் சிறப்பாக இந்த வருடம் முற்றிலும் நாட்டுப்புறக் கலைகளை மையப்படுத்தி குதூகலமாக கொண்டாடப்பட்டது. ஒரு நாள் நிகழ்வாக மட்டுமில்லாமல் ஒரு மாதம் முன்பே விழாவினை ஒட்டி போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறுவர்களுக்கான ஒப்புவித்தல் போட்டி , பெரியவர்களுக்கான பேச்சுப் போட்டி, பன்னாட்டு கவிதைப் போட்டி நடைபெற்றது.
இந்தியாவிலிருந்து மெய்நிகர் வாயிலாக வருகைதந்த கவிஞர் அறிவுமதி தலைமையில் கவி அரங்கம் நடைபெற்றது. இரண்டு நாள் கொண்டாட்டங்களின் முக்கிய நிகழ்வான ஏப்ரல் 15 ஆம் தேதி விழா மரபின்படி தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கியது.
இதன் சிறப்பு விருந்தினர்களாக ஜெர்மனியின் கார்சிங் நகர மேயர் யூர்கென் ஆஸெர்ல், முன்சென் இந்திய தூதரக தலைமை அதிகாரி மோஹித் யாதவ் கலந்து கொண்டனர். இருவரும் சிறப்புரை ஆற்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
முன்சென் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் அகடெமி மாணவர்கள் ஒவ்வொருவராக நாட்டுப்புறக் கலைகள் பற்றிய சிறு குறிப்புகளைக் கூறி கலைகளை நிகழ்த்தினர். சிறுவர், சிறுமிகளின் மயிலாட்டம், கிராமிய நடனம், சிறுவர்கள் மற்றும் பெண்களின் சிலம்பாட்டம் நடைபெற்றது.
சிறுமிகளின் காவடியாட்டம், ஒயிலாட்டம், யக்சகானா நடனம், சிறுவர், சிறுமிகள் தனித் திறமைகளை வெளிப்படுத்திய ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், மழலையர் மற்றும் பெற்றோருக்கான தமிழ் பாரம்பரிய ஆடை அலங்கார அணிவகுப்பு பார்வையாளர்களைக் கவர்ந்தன.
பெண்களின் பரத நாட்டியம், பெண்களின் கரகாட்டம், பெண்கள் மற்றும் ஆண்கள் சேர்ந்து ஆடிய பறையாட்டம், பெண்களின் சிறப்பு கிராமிய நடனம், படுகா குழு நடனம் ஆகியவையும் நடைபெற்றன. வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, இருவேறு குழுக்களின் இன்னிசை நிகழ்சசி, சிறுவர்களுக்கான சிறப்பு பட்டிமன்றம், பெரியவர்களுக்கான பட்டிமன்றம், தமிழ் வார்த்தை விளையாட்டு, குறுக்கெழுத்துப் போட்டி என கலைகளின் கதம்பமாக நிகழ்ச்சி அமைந்தது.
வண்ணமும் வனப்புமாய், உற்சாகமும் உத்வேகமும் கூடுதலாய் , திறனும் திட்டமிடலும், கலையும் கற்பனையும் கலந்து, அறுசுவை உணவோடு நடந்தேறிய கோலாகல விழா இனிதே நடந்து முடிந்தது. காலை முதல் மாலை வரை ஏறத்தாழ பத்து மணி நேரம் நிகழ்ச்சிகளில் தமிழும் கலைகளும் தழைத்தோங்கின.
தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சார்பில் செயலாளர் சுவாமிநாதனின் வரவேற்பு உரையும், சங்கத் தலைவர் செல்வகுமாரின் சிறப்புரையும் இடம்பெற்றிருந்தது, இறுதியாக சங்கத்தின் சார்பில் லோகேஷ் நன்றியுரை வழங்கினார்.