Published : 19 Apr 2023 04:10 AM
Last Updated : 19 Apr 2023 04:10 AM

வெளுத்து வாங்கும் வெயில்: பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே வருவதை தவிர்க்க அறிவுரை

சேலம்: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும், என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோடை வெயில் அதிகரித்துவரும் சூழலில், பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத பயணத்தின்போது குடிநீர் பாட்டிலை எடுத்துச் செல்ல வேண்டும். மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமுள்ள பருத்தி ஆடைகளை அணியவேண்டும்.

திறந்த வெளியில் வேலை செய்யும் போது தலையில் பருத்தி துணி அல்லது துண்டு அணிந்து கொள்ள வேண்டும். சூரிய வெப்பம் அதிகமாக உள்ள திறந்தவெளியில் வேலை செய்யும்போது களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக வெப்பம் குறைவாக உள்ள குளிர்ந்த இடத்துக்குச் செல்லலாம்.

அதிகளவிலான நீர் பருக வேண்டும். மோர், இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக் கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றைப் பருகலாம். கோடையில் குளிர்ந்த நீரால் குளிப்பது நன்மை அளிக்கும். சூரிய ஒளி நேரடியாக படும் ஜன்னல் மற்றும் கதவுகளை திரைச் சீலைகளால் மூட வேண்டும். வாகனங்களுக்குள் குழந்தைகளை விட்டுச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

மது, வாயு நிரப்பப்பட்ட குளிர்பானம், அளவுக்கு அதிகமாக தேநீர் மற்றும் காபி, அதிகளவில் இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் ஆகியவற்றை அருந்துவதைத் தவிர்க்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார். வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து, பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 106.2 டிகிரி பாரன்ஹீட்டாக உயர்ந்தது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் தவித்தனர். வெயில் நேரத்தில் சாலையில் சென்ற பலரும், மிகுதியான வெப்பத்தை தாங்க முடியாமல் திணறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x