Published : 18 Apr 2023 09:54 AM
Last Updated : 18 Apr 2023 09:54 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருமலையில் பாறை ஓவியங்களை சமூக விரோதிகள் சேதப்படுத்தி வரும் நிலையில், அதைத் தடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆண்டுதோறும் ஏப். 18-ம் தேதி உலக மரபு நாளாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் தனித்தன்மையுடைய மரபை, பாரம்பரியத்தை பெற்றுள்ளன. அவற்றை பாதுகாக்க உலக மரபு நாளில் இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
சிவகங்கை மாவட்டம் திருமலையில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் உள்ளன. அங்கு பறவை முகம் கொண்ட மனித உருவங்கள், விலங்கின் மீது மனிதன் அமர்ந்து வேட்டையாடுகிற வேட்டைக் காட்சி, கோட்டு உருவங்கள் ஆகியவை வரையப்பட்டுள்ளன.
மேலும் கையின் மேற்பகுதியில் வெட்டப்பட்டுள்ள காடிக்கு மேலே ‘எருக்காடு ஊரு காவிதி கோன் கொறிய பளிய்’ என்னும் 2,000 ஆண்டுகள் முந்தையதமிழி எழுத்து தொடர் காணப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் பாதுகாக்கப் பட்ட தொல்லியல் சின்னமாக திருமலை உள்ளது. இங்குள்ள பாறை ஓவியங்களை சமூகவிரோதிகள் சேதப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக் குழு நிறுவனர் புலவர்காளிராசா கூறுகையில், தமிழக அரசு திருமலையில் உள்ள தமிழி எழுத்து கல்வெட்டை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக 2015-16-ம் ஆண்டில் அறிவித்து பாதுகாத்து வருகிறது.
ஆனால் இங்குள்ள குகைகளில் சிலர் மது அருந்துவதும், சட்டவிரோத செயல் களில் ஈடுபடுவதும், பாறை ஓவியங்களில் கிறுக்கி வைப்பதும் தொடர்கதையாக உள்ளன. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமலையின் சிறப்பு குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT