

குழந்தைகளுக்கு சுய பராமரிப்பு அவசியம். அது இல்லாவிட்டால் ஒரு குழந்தை ஆரோக்கியமாக வளர்வதில் சிக்கல்கள் ஏற்படும் எனக் கூறுகின்றனர் உளவியல் நிபுணர்கள். குழந்தைகள் என்பவர்கள் பெற்றோர்களால், பெரியவர்களால் வளர்க்கப்பட வேண்டியவர்கள் தானே அவர்களை எப்படி அவர்களாலேயே பராமரித்துக் கொள்ள இயலும் என்ற கேள்வி நமக்கு எழலாம்.
ஆனால், உளவியல் நிபுணர்களோ சுய பராமரிப்பு என்பது குழந்தைகள் மனப்பதற்றம், மன அழுத்தம் போன்ற உளவியல் சிக்கல்களுக்குள் சிக்கிவிடாமல் தடுக்கும். வாழ்க்கையில் தாங்கள் எதிர்கொள்ளும் சூழலையும், எதிர்நோக்கவிருக்கும் சவால்களையும் ஆரோக்கியமான முறையில் அணுக உதவும். அதனால் குழந்தைகளுக்கு அவர்களின் மிகச் சிறிய வயதிலிருந்தே சுய பராமரிப்பை சொல்லிக் கொடுக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் சுய பராமரிப்பை மேற்கொள்ள பழக்கப்படுத்துங்கள் என்பதே அவர்களின் அறிவுறுத்தலாக இருக்கிறது.
ஏனெனில், மகிழ்ச்சியான ஆரோக்கியமான குழந்தைகள்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். ஆரோக்கியமான உறவுகளைப் பேண முடியும். பணிச் சூழலிலும் வெற்றி பெற முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக சமுதாயத்திற்கு நேர்மறையான விஷயங்களைக் கடத்த முடியும்.
சுய பராமரிப்பு ஏன் அவசியம்? - சுய பராமரிப்பு என்பது நம்மை நலமாக வைப்பதோடு நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் ஓர் ஆரோக்கியமான உறவைப் பேண உதவும். வளர்ந்த நபர்களே வாழ்க்கையில் ஏற்படும் அழுத்தங்களை சமாளிக்க தவிக்கிறார்களே என்ற அச்சத்திற்கு எல்லாம் இடம் கொடுக்காமல் குழந்தைகளோ பெரியவர்களோ அனைவரும் சுய பராமரிப்பை ஒரே மாதிரியாக கடைபிடிக்க வேண்டும்.
கரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பின்னர் குழந்தைகள் மத்தியில் மன அழுத்தம் சார்ந்த பாதிப்புகள் வெகுவாக அதிகரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரத்தின்படி 10 முதல் 14 வயதுடைய குழந்தைகள் மத்தியில் 3.6% பேருக்கும் 15 முதல் 19 வயதுடையோர் மத்தியில் 4.6 சதவீதம் பேருக்கும் மன அழுத்தம் இருக்கின்றது என்பது தெரியவந்துள்ளது.
உளவியல் சிக்கல்கள் ஏற்பட்டால் குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படுகிறது. அது அவர்களை தனிமைப்படுத்துவதோடு அவர்கள் அன்றாட வேலைகளைச் செய்வதைக் கூட கடினமாக்கிவிடுகிறது. உளவியல் சிக்கல்களால் கல்வியில் கவனமின்மை ஏற்படுகிறது.சில நேரங்களில் மன அழுத்தங்கள் குழந்தைகளை தற்கொலை வரை கொண்டு சென்றுவிடுகிறது.
குழந்தைகளை அன்றாடப் பணிகளில் ஈடுபடுத்துங்கள். அவர்களை அவர்களே எதற்கும் தயார் செய்ய பழக்கப்படுத்துங்கள். அது பள்ளிக்கு கிளம்புவதற்காக இருக்கட்டும் இல்லை நண்பர்களுடன் வெளியில் செல்வதற்காக இருக்கட்டும்.
குழந்தைகள் உங்களிடம் மனம் திறந்து பேச அனுமதியுங்கள். அவர்கள் மகிழ்ச்சி, கோபம், துக்கம், வெறுப்பு என எல்லாவற்றையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள அனுமதியுங்கள். அவர்களுக்காக உங்கள் செவிகள் எப்போதும் திறந்திருக்கட்டும். அப்படிச் செய்தால் அவர்கள் உங்களிடம் பாதுகாப்பாக உணர்வார்கள். அவர்கள் பேச்சு சுவாரஸ்யமாக இருப்பதாகப் பாராட்டுங்கள். அவர்கள் உலகம் சுவாரஸ்யமானது என்று நீங்கள் உணர்ந்து கொண்டதை வெளிப்படுத்துங்கள்.
சர, சுய பராமரிப்பை எப்படி சொல்லிக் கொடுப்பது என்ற சந்தேகம் எழுந்தால் அதற்கு ஒரே விடைதான் நீங்கள் உங்களைப் பராமரியுங்கள். உங்கள் குழந்தைகள் உங்கள் கட்டளைகளுக்கு கட்டுப்படுவதைவிட உங்கள் செயல்களைப் பின்பற்றுவதையே எளிதானதாகக் கருதுவார்கள். நீங்கள் ஒரு ஒர்க்கஹாலிக்காக எப்போது வேலை வேலை என்று இருந்தால் அதையே அவர்களும் உள்வாங்குவார்கள். அதனால் உங்கள் வேலைகளுக்கு இடையே உங்களுக்கான சின்ன விருப்பச் செயல்களில் ஈடுபடுங்கள். அதைப் பார்த்தே உங்கள் குழந்தைகளும் அவர்களின் விருப்பங்களை தேர்வு செய்து பின்பற்றுவார்கள். வாழ்தல் இனிது. வாழவைப்பது இனிதினும் இனிது.