

கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பல விநோதமான விஷயங்கள் இடம்பெற்றிருக்கும். நீளமாக நகம், நீளமாக தலைமுடி வளர்ப்பது தொடங்கி அதிகளவில் உணவு உட்கொள்வது வரை பல வேடிக்கைகளுடன் பட்டியல் நீளும். அப்படியொரு சாதனைதான் தூக்கத்தை தவிர்த்து கண்விழித்து இருத்தல். உலகிலேயே அதிக நேரம் கண்விழித்து கின்னஸ் சாதனை புரிந்த நபர் ராபர்ட் மெக் டொனால்ட். ஆனால் இந்தச் சாதனை நடந்து 35 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இப்படியொரு சாதனையை இனி யாரும் செய்ய முடியாது. ஏனென்றால், கின்னஸ் அமைப்பே தூக்கம் விழிக்கும் செயலை ஒரு சாதனையாக அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துவிட்டது.
இந்நிலையில், 1986-ல் ராபர்ட் பெக்டொனால்டு 19 நாட்கள் கண்விழித்து மேற்கொண்ட சாதனைதான் கடைசி சாதனையாக உள்ளது. அவர் மொத்தம் 453 மணி நேரம் 40 நிமிடங்கள் கண் விழித்திருந்து இந்தச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார். மெக்டொனால்டுக்கு முன்னதாக ஓர் அறிவியல் ஆராய்ச்சிக்காக ரேண்டி கார்ட்னர், ப்ரூஸ் மெக் அலிஸ்டர் என்ற இரண்டு மாணவர்கள் 11 நாட்கள் தூக்கம் விழிக்கும் சாதனையை மேற்கொண்டனர். சில நாட்களிலேயே ப்ரூஸ் விலகிக் கொள்ளம் ரேண்டி மட்டும் மொத்தம் 264 மணி நேரம் அவர்கள் தூங்காமல் இருந்தார்.
இது தொடர்பாக அந்த இருவரில் ஒருவரான ப்ரூஸ் மெக்அலிஸ்டர் அளித்த ஊடகப் பேட்டியில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களைப் பகிர்ந்தார். அவர் அந்தப் பேட்டியில், "தூக்கமில்லாமல் நீண்ட நாட்கள் விழித்திருப்பதையெல்லாம் ஒரு சாதனையாக நாங்கள் கருதியதே முட்டாள்தனம். அப்போது எங்களுக்கு அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ளும் வயதில்லை. நாங்கள் இருவரும் அப்போது 17 வயதே நிறைவு செய்திருந்தோம். தூக்கமில்லா சாதனையை மேற்கொண்டிருந்தபோது ரேண்டி கார்னரை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக மருத்துவர் வில்லியம் டெமன்ட் ஆய்வு செய்தார்.
நாட்கள் செல்லச் செல்ல தூக்கமின்மையால் ரேண்டியின் உடல் வெகுவாக பாதிக்கப்பட்டது. அவருடைய நினைவாற்றல் பாதிக்கப்பட்டது. கை, கால் நடுக்கம் ஏற்பட்டது. உற்சாகம் குறைந்தது. பகுப்பாய்வுத் திறன் மங்கியது. சில நேரங்களில் அவருக்கு உருவங்கள் தோன்றுவதுபோல் காட்சிப் பிழைகள் ஏற்பட்டன. 17 வயதில் ரேண்டி மேற்கொண்ட அந்த ஆராய்ச்சி 60 வயதில் அவருக்கு தூக்கமின்மை நோயைத் தந்தது. 10 ஆண்டுகள் சிகிச்சைக்குப் பின்னர் ஓர் இரவில் 6 மணி நேர தூக்கம் என்றளவிலேயே அது மேம்பட்டது" என்றார்.
போதிய தூக்கம் என்பது ஒரு மனிதனின் ஒட்டுமொத்த உடல்நலத்திற்கும் மிகவும் அவசியமானது. உடல் புத்துணர்ச்சி பெற தூக்கம் அவசியம். சீரான தூக்கம்தான் மனதையும் சீராக வைத்திருக்க உதவும். அதனால்தான் மெக்டொனால்டு மேற்கொண்ட சாதனைக்குப் பின்னர் தூக்கத்தை துறக்கும் சாகசத்தை கின்னஸ் அமைப்பு அங்கீகரிக்கவில்லை.