Published : 17 Apr 2023 04:07 AM
Last Updated : 17 Apr 2023 04:07 AM
கோத்தகிரி: கோத்தகிரி அருகே பழங்கால செஞ்சாந்து நிற பாறை ஓவியங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோத்தகிரியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் கரிக்கையூர், பொறிவரை கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதியில் செங்குத்தான பாறையில் 53 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம் கொண்ட பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டன. இந்த பகுதியை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தனர்.
மேலும், பாறை ஓவியங்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டது என்றும் தெரிவித்தனர். இந்நிலையில் கோத்தகிரியை அடுத்த ஜக்கனாரை அருகே காக்காகூண்டு கிராம வனப்பகுதியிலுள்ள தொளிக்கிபாறை என்ற இடத்தில் குமரவேல் ராமசாமி, சுதாகர் நெல்லியப்பன், வெங்கடேஷ், தனபால் ஆகியோர் அடங்கிய யாக்கை மரபு குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்குள்ள பாறைகளில் பழங்கால செஞ்சாந்து நிற ஓவியங்கள் வரையப்பட்டிருப்பது கண்டறியப்பட்டன. அந்த ஓவியங்களின் கருப்பொருளாக தடித்தமற்றும் நுண் கோடுகளால் வரையப்பட்ட குறியீடுகள், மனித உருவங்கள், மிகை சக்தி உருவங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. அப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதுதொடர்பாக பாறை ஓவியங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆவணப்படுத்தி வரும் யாக்கை மரபு குழுவினர் கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில் 12 இடங்களில் பாறை ஓவியங்கள் பதிவாகியுள்ளன. அவை பெரும்பாலும் கடல்மட்டத்தில் இருந்து 1,200 முதல் 1,500 மீட்டருக்கு உட்பட்ட உயரத்தில்தான் பதிவாகியுள்ளன.
இடுஹட்டி, சோலூர் ஆகிய 2 இடங்களில் மட்டும் 1,800 முதல் 2,000 மீட்டர் உயரத்தில் பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் தெங்குமரஹாடா, வெள்ளரிகம்பை, கரிக்கையூர், இடுஹட்டி, கொணவக்கரை, செம்மனாரை, தாளமொக்கை, சீகூர் ஆகிய இடங்களில் வண்ணச்சாந்துகள் கொண்டு வரையப்பட்ட ஓவியங்களும், பாறை கீறல் வகை ஓவியங்களும் பதிவாகியுள்ளன.
இந்த ஓவியங்கள் கடவுள் நம்பிக்கை, புராணங்கள், சடங்குகள் மற்றும் வரலாற்றுக்கு முந்தைய கால சமூகத்தின் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகளைவெளிப்படுத்தும் விதமாக உள்ளன. ஆகவே, இந்த ஓவியங்களை பாதுகாக்க வேண்டியது அவசியம்" என்றனர்.
அரசு கலை மற்றும் வரலாற்று ஆய்வாளர் காந்திராஜன் கூறும்போது, "ஜக்கனாரை பகுதியில் கண்டறியப்பட்ட ஓவியங்கள், இருவேறு தன்மையில் தடித்த மற்றும் நுண் கோடுகளால் வரையப்பட்டுள்ளன. ஓவியத்தின் தன்மை, வடிவியல் கோட்பாட்டின் அடிப்படையில் இருக்கிறது.
அங்கு வாழ்ந்த பழங்கால மனிதர்கள் மிகவும்எச்சரிக்கையுடன், தங்களது சடங்குகள் குறித்து வரைந்துள்ளனர். நுண் கற்கால பண்பாட்டு தன்மையுடன் ஓவியங்கள் உள்ளதால், அவை இரும்பு காலத்துக்கு முன்பே பழங்குடியின மக்கள் இங்கு வாழ்ந்து வந்தது உறுதியாகியுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT