

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு கிடைக்கப்பெற்ற புவிசார் குறியீடு அங்கீகாரச் சான்றிதழை, அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில், மலைக் கிராம விவசாயிகளிடம் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் மலைப்பூண்டு விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. இப்பகுதிகளில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மலைப்பூண்டு விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த மலைப் பூண்டு மருத்துவ குணமிக்கது என்பதை நிரூபித்து, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக உயிரி தொழில் நுட்பத் துறை மூலம் அதன் தலைவர் உஷா ராஜநந்தினி கடந்த 2018-ல் புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்து கிடைக்கப் பெற்றுள்ளது. இதையடுத்து, மலைப்பூண்டு விவசாயம் செய்யும் விவசாயிகள் சங்கத்தினருக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கும் விழா, கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.
திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.கலா, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பல்கலைக்கழகப் பதிவாளர் பி.ஷீலா, உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் உஷாராஜநந்தினி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பெருமாள்சாமி ஆகியோர் பேசினர்.
கொடைக்கானல் மலைப் பூண்டு மற்றும் காய்கனிகள் மேல் மலை விவசாயி சங்கம், கோடை மலைப் பூண்டு மற்றும் காய்கனிகள் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியவற்றுக்கு, திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் மலைப்பூண்டுக்கான புவிசார் குறியீடு அங்கீகாரச் சான்றிதழை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், மலைப் பகுதியில் 6 மாதத்துக்கு ஒருமுறை மட்டும் விளையும் மலைப் பூண்டை விவசாயிகள் உற்பத்தி செய்து, மற்ற பூண்டுகளை கலப்படம் செய்யாமல் புவிசார் குறியீடு அங்கீகார ஸ்டிக்கர்களுடன் விற்பனை செய்ய வேண்டும் என, மலைக் கிராம விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதில், கொடைக்கானல் மலைப்பூண்டு மற்றும் காய்கனிகள் மேல்மலை விவசாயிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் பால கிருஷ்ணன், பொருளாளர் நாட்ராயன், கோடை மலைப் பூண்டு மற்றும் காய்கனிகள் உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் செல்லையா, செயலாளர் தனமுருகன் மற்றும் மலைப் பூண்டு விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.