வெம்பக்கோட்டை 2-ம் கட்ட அகழாய்வு: 200 பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு

வெம்பக்கோட்டை 2ம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருட்கள்
வெம்பக்கோட்டை 2ம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருட்கள்
Updated on
2 min read

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட 200 அரிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி முதலாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. 16 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த செப்டம்பர் மாத இறுதி வரை இப்பணிகள் நடைபெற்றன. அப்போது நுண் கற்காலம் முதல் வரலாற்று தொடக்க காலம் வரை இப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன.

அதோடு, நுண்கற்கால கருவிகள், பல வகையான பாசிமணிகள், சுடு மண்ணாலான காதணிகள், பொம்மைகள், தக்காளி, சங்ககால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என 3,254 பழங்கால பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் மற்றும் பானை ஓடுகள் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என அறிய முடிகிறது.

இந்நிலையில், 2-ம் கட்ட அகலாய்வுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்தன. இதையடுத்து, இப்பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 6ம் தேதி தொடங்கப்பட்டன.கடந்த 10 நாட்களாக நடைபெற்ற 2-ம் கட்ட அகல ஆய்வு பணியில் இதுவரை சுமார் 200=க்கும் மேற்பட்ட பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து வெம்பக்கோட்டை அகழாய்வு பணி இயக்குனர் பொன் பாஸ்கர் கூறுகையில், "இந்த இரண்டாம் கட்ட அகழாய்வில் மேலும் பல அறிய பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. சுடு மண்ணால் செய்யப்பட்ட புகை பிடிப்பான், கல்லால் ஆன எடை கற்கள், செப்பு நாணயங்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணி, இரும்பு பொருட்கள் போன்ற 200 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in