

சேலம்: மக்கள் குடிநீர் பாட்டில்களை வாங்கும்போது, அதற்கு உணவுப் பாதுகாப்பு உரிமம் இருக்கிறதா? உற்பத்தி தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும் என்று மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தெரிவித்தார்.
சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் கேன்களில் குடிநீர் நிரப்பி விற்பனை செய்யும் உற்பத்தியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமை வகித்தார். சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த குடிநீர் உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின்னர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் செய்தியாளர்களிடம் கூறியது: கேன்களில் குடிநீர் நிரப்பி விற்பனை செய்யும் நிறுவனம் எவ்வாறு செயல்பட வேண்டும், குடிநீர் பாட்டிலில் குடிநீரை எவ்வாறு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
எத்தனை நாட்களுக்கு ஒருமுறை குடிநீரை பரிசோதனை செய்ய வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல் உள்ளவர்களை குடிநீர் கேன்களை நிரப்ப அனுமதிக்க கூடாது. விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் பாட்டில், கேன்களில் தயாரிப்புத் தேதி குறிப்பிடப்படுவதில்லை, கேன்களில் அசுத்தம் இருப்பது, பழைய கேன்களை பயன்படுத்துவது உள்ளிட்ட புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வருகின்றன. குடிநீர் பாட்டில்களில் கிருமிகள் இருக்கும் பட்சத்தில் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. அது போன்ற பிரச்சினைகள் வரக்கூடாது என்பதற்காகத்தான் விழிப்புணர்வு கூட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் குடிநீரை வாங்கும்போது, அதற்கு உணவுப் பாதுகாப்பு உரிமம் இருக்கிறதா? என்பதை பார்த்து வாங்க வேண்டும், குடிநீர் பாட்டில் மற்றும் கேன்களில் உற்பத்தி தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவற்றை மக்கள் பார்த்து வாங்கவேண்டும். இவற்றைப் பார்த்து வாங்கினால் கலப்படம்,போலியான குடிநீர் பாட்டில்களில் இருந்து தப்பிக்கலாம் என்றார்.