

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதன் தாக்கம் குறித்தும், பொதுமக்கள் பின்பற்ற வேண்டியவை பற்றியும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது 300-ஐ கடந்துவிட்டது. இதன் காரணமாக, அனைத்து அரசு மருத்துவமனைகள் என்று சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ களப் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தினசரி 11 ஆயிரம் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இதற்கிடையே இந்தியா முழுவதும் இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று பரவி வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. இந்நிலையில், கரோனா தொற்று மற்றும் எச்3என்2 தொற்று பரவல் தொடர்பாகவும், பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திற்கு விரிவாக விளக்கம் அளித்துள்ளார், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் தேரணி ராஜன்.
"தற்போது பரவி வரும் புதிய வரை கரோனா தொற்றால் நுரையீரல் பாதிப்பு ஏற்படவில்லை. சளி, இருமல், காய்ச்சல், தொண்டையில் கரகரப்பு போன்ற அறிகுறிகள்தான் உள்ளன. புதிய வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 7 நாட்களில் குணமாகிவிடுகிறார்கள்.
மூக்கில் இருந்து நீர் கொட்டினால் அது வைரஸ் காய்ச்சல். கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு கடுமையான உடல் வலி மற்றும் கடுமையான தலைவலி இருக்கும். எனவே இந்த அறிகுறிகளை வைத்து அது வைரஸ் காய்ச்சலா அல்லது கரோனா தொற்றா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தற்போது கரோனா தொற்றின் XBB.1.16 என்ற வகை பரவி வருகிறது. இதற்கு முன்பு பரவிய XBB வகையின் இரண்டு வகைகள் சேர்ந்த இந்த புதிய வகையாக உருமாறி உள்ளது. மிகவும் குறைவான நாட்களில் இந்த XBB.1.16 என்ற தொற்று பரவுகிறது. இதன் காரணமாகத்தான் தற்போது தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
டெல்டா வகைகளில் 4 முதல் 14 நாட்களில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்று பரவியது. தற்போது பரவி வரும் XBB வகை தொற்று 3 நாட்களுக்குள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவி வருகிறது. இணை நோய் உள்ளவர்கள், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் வீட்டில் இருக்கக் கூடாது. உடனடியாக மருத்துவமனையை அனுக வேண்டும்.
நாம் போட்டுக்கொண்ட கரோனா தடுப்பூசியும், நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியும் புதிய வகை கரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள போதுமானதாக உள்ளது. எனவே, பொதுமக்கள் பதற்றம் அடைய தேவை இல்லை. தேவையான இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை தூய்மையாக வைத்துருக்க வேண்டும்.
இருமல், தும்மல் வரும்போது கைகளை கொண்டு மூடிக் கொள்ள வேண்டும். அறிகுறி இருந்தால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். நல்ல சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவு நீர் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.