

ராமநாதபுரம்: சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ், `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் இலங்கையின் தலைமன்னார்- தனுஷ்கோடி பாக் நீரிணை கடலை நீந்திக் கடக்க உள்ள முதல் மாற்றுத் திறனாளி என்ற சாதனையைப் படைக்க உள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன், வனிதா தம்பதியின் மகன் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ்(29). இவர் பிறவியிலேயே கால், கைகள் செயல்படாத மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி. `செரிபரல் பால்ஸி' என்ற நோயால் பாதிக்கப் பட்டவர்.
இவரால் பேசவோ, தானே தனது தேவைகளைப் பூர்த்தி செய்யவோ முடியாது. இருந்தபோதும், இவரது பெற்றோர் இவரை ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் 4 வயது முதல் நீச்சல் கற்றுக்கொடுக்கத் தொடங்கினர்.
கடந்த 2018-ல் தேசிய மாணவர் படை நடத்திய போட்டியில் கடலூர்- புதுச்சேரி 5 கி.மீ. தொலைவை கடலில் நீந்தி சாதனை படைத்தார். இதற்காக அவருக்கு மத்திய அரசின் சமூக நீதித் துறை, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறந்த முன்மாதிரி இளைஞர் என்ற தேசிய விருதை வழங்கியது. இவ்விருதை அப் போதைய குடியரசு துணைத் தலைவர் வெங் கய்யா நாயுடு வழங்கினார்.
2022-ம் ஆண்டு தேசிய மாணவர் படை நடத்திய போட்டியில் கடலூர்-புதுச்சேரி 10 கி.மீ. தூரம் கடலில் நீந்தி சாதனை படைத்தார். அப்போதைய முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பாராட்டி பரிசு வழங்கினர். இதுவரை பல்வேறு போட்டிகளில் 40 பதக்கங் களை வென்றுள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் இலங் கையின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான 32 கி.மீ. தூர பாக் நீரிணை கடலை நீந்திக் கடக்க திட்டமிட்டுள்ளார். வரும் 12-ம் தேதி தலைமன்னாரில் தொடங்கி, 13-ம் தேதி தனுஷ்டியை அடையத் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, நேற்று ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் மற்றும் அவரது பெற்றோர் ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸை சந்தித்து, வரும் 13-ம் தனுஷ்கோடி வந்து சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டனர்.
நீந்துபவர்கள் கை, கால்களை அசைத்து `ப்ரீ ஸ்டைல்' முறையில் நீந்துவர். ஆனால், இவரால் கை, கால்களை அசைத்து நீந்த முடியாது என்பதால் நெஞ்சை அசைத்து (`ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' ) நீந்துவார். அதனால் `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் தலைமன்னார்- தனுஷ்கோடி கடலை நீந்திக்கடக்கும் முதல் மாற்றுத்திறனாளி இளைஞர் என்ற உலக சாதனையை படைக்க உள்ளார்.
இது குறித்து ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸின் தாய் வனிதா கூறியதாவது: மனவளர்ச்சி குன்றிய குழந்தையாக இருந்த போதும், அவரை மற்ற குழந்தைகளைப்போல் எதிலாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் நீச்சல் கற்றுக்கொடுக்க தொடங்கினோம். அவருக்கும் இதில் விருப்பம் ஏற்பட்டது. பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.
`செரிபரல் பால்ஸி' நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வளர்ப்பதே சிரமம். இவரைப் போன்று ஏராளமான குழந்தைகள் உள்ளனர். அவர்களின் பெற்றோர்களுக்கு எனது மகன் ஓர் ஊக்குவிப்பாளராக இருப்பார். இவரைப்போன்ற குழந்தைகளை பெற்றோர் காப்பகங்களுக்கு அனுப்பாமல் தாங்களே பாதுகாத்து வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.