

புதுடெல்லி: பிஹாரின் மதுபானி பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திர குமார் (36). இவர் தனது நண்பர் கிருஷ்ண குமாருடன் நொய்டாவில் தங்கி படித்தார். கடந்த 2014-ம் ஆண்டு யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கிருஷ்ணகுமார் டேங்கர் லாரி மோதி படுகாயம் அடைந்தார். அவர் ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
கிருஷ்ணகுமாரின் சிகிச்சைக்காக ராகவேந்திர குமாரும் நண்பர்களும் சேர்ந்து ரூ.20 லட்சம் நிதி திரட்டி செலவு செய்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணகுமார் உயிரிழந்தார். நண்பரின் மரணம், ராகவேந்திர குமாரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அப்போது முதல் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அவர் இலவசமாக ஹெல்மெட் வழங்கி வருகிறார்.
ஹெல்மெட் வழங்கும் வள்ளலாக வாழும் ராகவேந்திர குமார் தனது சேவை குறித்து கூறியதாவது. சட்டப்படிப்பை நிறைவு செய்த பிறகு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அதோடு பங்கு சந்தை வணிகத்திலும் ஈடுபட்டேன். இதன்மூலம் போதுமான அளவுக்கு பணம் கிடைத்தது. ஒரு கடைக்கு சென்றேன். அங்கிருந்த ஹெல்மெட்டுகள் அனைத்தையும் வாங்கினேன். யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற அனைவருக்கும் இலவசமாக ஹெல்மெட்டுகளை வழங்கினேன். எனது சேவையை அறிந்த பிஹார் அரசு, “இந்தியாவின் ஹெல்மெட் மனிதர்" என்ற பட்டத்தை வழங்கியது. உத்தர பிரதேச அரசு, உத்தராகண்ட் அரசு எனது சேவையை பாராட்டின.
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாலிவுட் நடிகர் சோனு சூட் உள்ளிட்டோர் என்னை நேரில் பாராட்டியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் சமூக வலைதளங்கள் வாயிலாக எனக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுவரை ரூ.2 கோடி செலவில் 56,000 ஹெல்மெட்டுகளை இலவசமாக வழங்கியிருக்கிறேன். ஒரு கட்டத்தில் என்னிடம் பணம் இல்லை. அப்போது எனது மனைவியின் நகைகளை அடகு வைத்து ஹெல்மெட்டுகளை வாங்கி இலவசமாக வழங்கினேன். நொய்டாவில் இருந்த எனது வீட்டை ரூ.52 லட்சத்துக்கு விற்று ஹெல்மெட்டுகளை வாங்கி விநியோகம் செய்திருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.