கோடை வெயில் தாக்கத்தில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க ஆலோசனை

கோடை வெயில் தாக்கத்தில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க ஆலோசனை
Updated on
1 min read

மேட்டூர்: கோடை வெயிலின் தாக்கத்தால் கால்நடைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெயில் தாக்கத்தில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க வேண்டும், என கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, மேலும் அவர்கள் கூறியதாவது: கோடையில் ஈக்களின் தொல்லையால் கறவை மாடுகள் அமைதியின்றி காணப்படும். ஈக்கள் அவற்றின் மீது அமர்வதாலும் கறவை மாடுகளை சுற்றி வட்டமிடுவதாலும் பாதிப்பு ஏற்படும். இதனால் பால் உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளது.

தொழுவங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். கடுமையான வெப்ப காலங்களில் கறவை மாடுகள் மீது 2 அல்லது 3 முறை தண்ணீர் தெளிக்கலாம். வெயில் அதிகமாக இருக்கும்போது மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. வெப்பத்தின் அளவு குறைவாக உள்ள காலையிலும், மாலையிலும் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்.

கோடை காலங்களில் இறைச்சிக் கோழிகளின் இறப்பு விகிதம் அதிகளவில் இருக்கும். வெயில் காலங்களில் முட்டை கோழிக்கு 2.5 சதுர அடியும், இறைச்சிக் கோழிக்கு 15 சதுர அடியும் இடவசதி வேண்டும். பக்கவாட்டில் சாக்குகளை தண்ணீரில் நனைத்து தொங்கவிட வேண்டும். கறவை எருமைகள் சினைப் பருவத்திற்கு வரும் அறிகுறி கோடையில் வெளிப்படையாகத் தெரியாது. இதை ‘ஊமைப் பருவம்’ என்று அழைப்பர்.

கோடை காலத்தில் எருமைகளின் இனவிருத்தி திறனை அதிகரிக்க நிழலில் கட்டி பராமரிக்க வேண்டும். அருகில் குளங்கள் இருந்தால் தண்ணீரில் நீந்த விடலாம். வசதி இல்லாவிட்டால்கால்நடைகள் மீது நீரை தெளித்து வெப்பத்தை குறைக்கலாம். எருமைகளை எப்போதும் கட்டி வைக்காமல் சுதந்திரமாக திரிய விட வேண்டும். இதுபோன்ற பராமரிப்பு முறைகளை கடைப்பிடித்து கால்நடைகளை கோடை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம், என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in