

கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற் றும் பபாசி ஆகியவை இணைந்து விழுப்புரத்தில் நடத்திய புத்தகத் திருவிழாவில் ரூ.1.52 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையானதாக மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே நகராட்சித் திடலில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற் றும் பபாசி ஆகியவை இணைந்து கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஏப். 5-ம் தேதி புத்தகத் திருவிழாவை நடத்தியது. இந்த புத்தகத் திருவிழாவில் 106 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
பல்வேறு பிரிவுகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். ‘நாள்தோறும் இரு ஆளுமை கள்’ என பல்துறைகளைச் சேர்ந்தவர்கள் சிறப்புரையாற்றினர். இதையடுத்து புத்தகத் திருவிழா நேற்று முன்தினத்துடன் நிறை வடைந்தது.
இந்த விழாவுக்கு ஆட்சியர் சி.பழனி தலைமை வகித்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ்கள், புத்தகத் திருவிழாவில் பணியாற்றிய அலுவலர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்கள் மதுக்கூர் ராமலிங்கம், எழுத்தாளர் சோ.தர்மன் புத்தகத் திருவிழா குறித்து உரையாற்றினர்.
தொடர்ந்து ஆட்சியர் பேசுகையில், “விழுப்புரத்தில் முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த புத்தகத் திருவிழாவில் 12 நாட்களில் 2.50 லட்சம் பேர் பார்வையிட்டுச் சென்றனர். மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றது சிறப்புக்குரியது. வாசிப்பாளர்களின் பெரும் ஆதரவால் ரூ.1.52 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை நடை பெற்றுள்ளது. அடுத்தாண்டில் இன்னும் சிறப்பான முறையில் புத்தகத் திருவிழாவை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார். நிறைவாக மாவட்ட நூலக அலுவலர் சி.பாலசரசுவதி நன்றி கூறினார்.
கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களில் புத்தகத் திருவிழாக்களை நடத்தியது போல், மாவட்டங்களில் உள்ள இரண்டாம் நிலை நகரங்களான சிதம்பரம், விருத்தாசலம், திண்டிவனம், திருக்கோவிலூர் உள்ளிட்ட நகரங்களிலும் புத்தகத் திருவிழாவை நடத்தும் முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் முன்னெடுக்க வேண்டும் என்று இப்பகுதி வாசிப்பாளர்கள் ஆர்வத்துடன் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.