Published : 07 Apr 2023 06:30 AM
Last Updated : 07 Apr 2023 06:30 AM

துலுக்கர்பட்டியில் 2-ம் கட்ட அகழாய்வுப் பணி: இதுவரை 1,009 தொல் பொருட்கள் கண்டெடுப்பு

ராதாபுரம் வட்டம் துலுக்கர்பட்டி கிராமத்தில் 2-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா .ப. கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் துலுக்கர்பட்டி கிராமத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகளை சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

துலுக்கர்பட்டி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் முதற்கட்ட அகழாய்வின்போது கண்டெடுக்கப் பட்ட தொல்பொருட்களை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:

தொன்மையான தமிழ் நாகரிகங் களை கண்டெடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் தொல்லியல்துறை மூலமாக பல்வேறு இடங்களில் அகழாய்வுப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ராதாபுரம் வட்டம், நம்பியாற்றின் தென்கரையில் அமைந்துள்ள துலுக்கர்பட்டியில் 2-ம் கட்டமாக அகழாய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன.

துலுக்கர்பட்டி தொல்லியல் மேடானது விளாங்காடு என்றழைக்கப்படுகிறது. இரும்பு மற்றும் தொடக்க வரலாற்று காலத்தைச் சேர்ந்த இவ்வாழ்வியல் மேடானது 2.5 மீ உயரம், 12 ஹெக்டேர் (36 ஏக்கர்) பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. இத்தொல்லியல் தளமானது சிவகளை, ஆதிச்சநல்லூருக்கு சமகாலத்தைச் சேர்ந்ததாகும் என்று தெரியவந்துள்ளது.

முதல் கட்ட அகழாய்வுப் பணியில் இப்பகுதியில் 17 குழிகள் தோண்டப்பட்டிருந்தன. 1,009 தொல்பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இதில் வெள்ளி முத்திரை காசுகள், செம்பினாலான பொருட்கள், இரும்பினாலான பொருட்கள், சுடுமண் பொம்மை, சுடுமண் விளையாட்டுப் பொருட்கள் (சில்லுகள் மற்றும் சதுரங்க காய்கள்) கார்னிலியன் மணிகள், நீலக்கல் மணி, கண்ணாடி மணிகள், பளிங்கு கல்மணிகள் ஆகியவை முக்கியமானவையாகும்.

மேலும் பானை ஓடுகள், 1,400 குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள், 2,050 வெண்மை நிறத்தினால் அலங்கரிக்கப்பட்ட பானை ஓடுகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கருப்பு நிற பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. பல்வேறு பொம்மைகள், ஈமத்தாழிகள் என அதிகமாக மண்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன.

இப்பகுதியில் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை இருந்ததற்கான சான்றுகள் கிடைக்க பெறுவதால் இந்த தொல்லியல் மேடுப்பகுதியில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியிருக்கிறது. இப்பணிகள் வரும் செப்டம்பர் மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளது என்று தெரிவித்தார்.

அகழாய்வு இயக்குநர் வசந்த்குமார், உதவி அலுவலர் காளீஸ்வரன், ராதாபுரம் வட்டாட்சியர் வள்ளிநாயகம், ஆனைக்குளம் ஊராட்சி தலைவர் ஹசன், வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ரைகனா ஜாவித் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x