பணிகளை பாதிக்கும் தூக்கமின்மையும், தவிர்க்கும் வழிகளும் - ஒரு விளக்கம்

பணிகளை பாதிக்கும் தூக்கமின்மையும், தவிர்க்கும் வழிகளும் - ஒரு விளக்கம்
Updated on
3 min read

நீங்கள் சரியாக தூங்காத ஓர் இரவை நினைத்துக் கொள்ளுங்கள். அதற்கு அடுத்த நாளை உங்களால் இயல்பாக தொடங்க முடிந்ததா? அந்த நாள் மிகவும் சிரமத்துடன் தொடங்கியதா? அந்த நாளை மிக நீண்டதாக நீங்கள் உணர்ந்தீர்களா? வேலை செய்வதற்கு பதிலாக ட்விட்டர், டிக் டாக்கில் அதிக நேரம் செலவிட்டீர்களா? - இவற்றுக்கெல்லாம் உங்கள் பதில் ‘ஆம்’என்றால், நீங்கள் தனியாள் இல்லை.

நாம் ஏன் தூங்குகிறோம் என்று முழுமையாக நமக்குத் தெரியாவிட்டாலும், நமது உடல் மற்றும் மனம் செயல்படுவதற்கு தூக்கம் மிகவும் அவசியம் என்பது நமக்குத் தெரியும். அப்படியானால் மோசமான தூக்கம் நமது அடுத்த நாள் வேலை எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதையும் அந்தச் சிக்கலை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்பதையும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

மனித நடத்தைகள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், ஒரு வேலை திறம்பட செய்வதற்கு தூக்கம் எவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக நானும் எனது சகாவும் தொழிலாளர்களிடம் தொடர்ச்சியான ஓர் ஆய்வினை மேற்கொண்டோம். தொழிலாளர்களின் வேலைகளுக்கிடையில் ஒரு நாளின் பல்வேறு நேரங்களில் பல வாரங்களாக அவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இரவில் போதிய அளவு நன்றாக தூங்கிய தொழிலாளர்கள் தங்களின் வேலையில் திறமையாகவும், அதிக ஈடுபாடுடனும் செயல்பட்டனர். இரவில் சரியாக தூக்காத தொழிலாளர்கள் வேலையைத் தள்ளிப்போடுவது, மற்றவர்கள் செய்த வேலையை தான் செய்ததாக கூறுவது போன்ற ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டனர் என்பதை அந்த ஆய்வு உணர்த்தியது.

மன உறுதியை பாதிக்கும் தூக்கம்: நம் எண்ணங்களையும் நடத்தைகளையும் கட்டுப்படுத்தி, ஒருங்கிணைக்கும் அறிவாற்றலுக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. போதிய தூக்கத்தினால் கிடைக்கும் அறிவாற்றல் என்பது சுயக்கட்டுப்பாடு மற்றும் மனஉறுதியுடையதாக இருக்கும்.

நாம் செய்யும் பல வேலைகளுக்கு மனஉறுதி மிகவும் இன்றியமையாதது. நமது எண்ணத் தூண்டல்கள், உணர்வுகளை கட்டுப்படுத்தவும், சுவாரஸ்யமில்லாத, அதிக விருப்பமில்லாத வேலைகளைச் செய்ய நமக்கு மன உறுதி மிகவும் முக்கியம்.

உதாரணமாக, வாடிக்கையாளர்களை எதிர்கொண்டு உரையாடும் பொறுப்பில் இருப்பவர்கள், அன்று சகஜமாக இல்லாவிட்டாலும், இன்முகத்துடன் வாடிக்கையாளர்கள எதிர்கொள்ள மனஉறுதி தேவைப்படுகிறது.

இரவு சரியாக தூங்காத நாளில் சிறப்பாக எப்படி செயல்படுவது? - ஒருவருக்கு சரியான அளவு தூக்கம் மிகவும் அவசியம் என்பதை பல்வேறு ஆய்வுகள் வலியுறுத்துகின்றன. சிறந்த தூக்கத்திற்காக, தூங்குவதற்கு முன் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தாதீர்கள் போன்ற பல்வேறு பரிந்துரைகளையும் அந்த ஆய்வுகள் வழங்குகின்றன. ஆனால், நம்மில் பலருக்கு, பல இரவுகள் சரியான தூங்கமில்லாத இரவுகளாகவே அமைந்து விடுகின்றன. குறிப்பாக மன அழுத்தில் இருக்கும் நாட்கள்... எல்லாம் சரிதான், இரவு போதிய தூங்கம் இல்லாத போது அடுத்த நாள் நாம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்கு இதோ சில வழிகள்:

1. வேலைகளை திறம்பட திட்டமிடுங்கள்: முதல் நாள் இரவு சரியாக தூங்காமல் அடுத்த நாள் பணிக்குச் செல்லும் போது, உங்களால் முடிந்த வரை அதிக மன உறுதி தேவைப்படும் வேலைகளை செய்யாமல் தவிர்த்திடுங்கள். அதற்கு பதிலாக எளிமையான அதிக சிந்தனை தேவைப்படாத பணிகளை செய்திடுங்கள். அந்த நாளில் அதிக மன உறுதி தேவைப்படும் வேலையைத் தவிர்க்க முடியாது என்றால், அவற்றை மனம் உற்சாகமாக இருக்கும் நாளின் தொடக்கத்தில் செய்யத் திட்டமிடுங்கள்.

2. உங்கள் எண்ணங்களை மறுபரிசீலனை செய்யுங்கள்: மனஉறுதியைப் பற்றிய ஒருவரின் சிந்தனை அதில் ஈடுபடும் திறனை வளர்ப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகமான மனஉறுதியைச் செலுத்துவது நம்முடைய மனதின் ஆற்றலை வடிகட்டிவிடுகிறது என்று ஒரு கோட்பாடு தெரிவிக்கிறது. ஆனால், குறிப்பிட்ட சில எண்ணங்களினால் மட்டுமே மனஉறுதியை பெறமுடியும் என்று நம்பும் மக்களின் எண்ணஆற்றல் விரைவில் சோர்வடைந்து விடுகிறது. ஆனால், எல்லாவகையான எண்ணங்களில் இருந்தும் மனஉறுதியைப் பெற முடியும் என்று நினைக்கும் மக்கள் விரைவாக புத்துணர்ச்சி பெறுகிறார்கள்.

என்னுடைய ஆய்வின்படி, மனு உறுதிக்கான எண்ணங்கள் எல்லையில்லாதது என எண்ணும் தொழிலாளர்கள், முந்தைய நாள் இரவில் சரியாக தூங்காத போதிலும் அடுத்த நாள் வேலையை சிறப்பாகவே செய்கிறார்கள். மன உறுதிக்கான வரையறைகளை ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். என்றாலும், அதிகமான மனஉறுதியை செலவிட்டு ஒரு பணியை செய்யும் போது உங்களின் எண்ண ஆற்றல் குறைவது பற்றிய உங்களின் பார்வையை நீங்கள் மறுபரிசீலனை செய்யலாம்.

3. உங்களால் மாறமுடியாத போது சூழலை மாற்றுங்கள்: நீங்கள் டயட்டில் இருக்கும் போது ஒவ்வொரு முறையும் உங்கள் சமையலறை அலமாரியை திறந்து அதில் சாக்லெட்டை எடுத்து சாப்பிடாமல் இருக்க முயற்சிப்பதை விட சூப்பர் மார்க்கெட்டில் சாக்லெட் வாங்காமல் இருப்பது சிறந்தது. மனஉறுதியை செலுத்துவதில் கைதேர்ந்தவர்கள் உண்மையில் தேவையில்லாத சூழல்களை தவிர்க்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பரிசோதனை ஒன்றில், ஒரு பணியினை செய்ய கவனச்சிதறல் அதிகமாக இருக்கும் அறை மற்றும் கவனச்சிதறல் குறைவாக உள்ள அறையில், மனஉறுதியை செலுத்துவதில் கைதேர்ந்தரவர்கள் கவனச்சிதறல் குறைவாக இருக்கும் அறையினையே அதிகம் தேர்தெடுக்கின்றனர். எனவே அதிக தூக்கம் இல்லாத இரவுக்கு அடுத்த நாள், அதிக மனஉறுதியை செலுத்த தேவைப்படாத யுக்திகளைக் கையாளுவது உங்களுக்கு வேலையை திறமையாகவும், முழுவதுமாகவும் செய்து முடிக்க உதவும்.

4. வேடிக்கையான வீடியோ பாருங்கள்: நேர்மறையான உணர்வுகள், எதிர்மறை உணர்வுகளால் உருவாகும் தீங்கான விளைவுகள் மீது ஆதிக்கம் செலுத்தி மன ஆற்றலை மீட்டுருவாக்க உங்களுக்கு உதவி செய்கிறது.

சமீபத்திய ஆய்வு ஒன்றில், பகலில் வேடிக்கையான வீடியோக்களை பார்ப்பது, ஊழியர்களுக்கு வேலை செய்யும் போது ஏற்படும் தீங்கான எண்ணங்களை குறைத்து வேலைசெய்வதற்கு தேவையான மனஉறுதியினைத் தருகிறது என்று நானும் என் சாக்களும் தெரிந்து கொண்டோம். எனவே, இரவில் சரியான தூக்கம் இல்லை என நீங்கள் உணரும் நாளில், உங்களுடைய மன உறுதி குறைவாக இருப்பதாக நீங்கள் உணரும் போது, வேடிக்கையான வீடியோக்களை பார்க்கும் போது நீங்கள் உற்சாகமாக உணர முடியும். ஆனால், அதற்கு அடிமையாகாமல் இருப்பதில் கவனமாக இருங்கள்.

- தி கான்வர்சேஷன்.காம்-ல் டப்ளின் ட்ரினிட்டி கல்லூரியின் ஆர்கனைசேஷனல் பிகேவியர் இணை பேராசிரியர் வாடிஸ்லாவ் ரிவ்கின், எழுதிய ஆங்கில கட்டுரையின் தமிழ் வடிவம் இது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in