Last Updated : 04 Apr, 2023 09:30 PM

6  

Published : 04 Apr 2023 09:30 PM
Last Updated : 04 Apr 2023 09:30 PM

“நம்மை யாரிடமும் நிரூபிக்க வேண்டியதில்லை” - கோவை பஸ் ஓட்டுநர் ஷர்மிளா நேர்காணல்

ஷர்மிளா

கோவை காந்திபுரம் - சோமனூர் தடத்தில் தனியார் பேருந்தை இயக்கும் ஷர்மிளா, கோவை மாநகரின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கோவை வடவள்ளியைச் சேர்ந்த 24 வயதான இவர், மருந்தாளுநர் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்கிறார். ஆட்டோ ஓட்டுநரான தந்தையைப் பார்த்துத் தானும் ஓட்டுநராக வேண்டும் என விரும்பினார். அதன்படி சில காலம் ஆட்டோ ஓட்டுநராகவும் கால் டாக்ஸி ஓட்டுநராகவும் இருந்தார். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் பலரைத் தன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகு கோவையின் விவி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் பேருந்து நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க, இந்த வேலை கிடைத்திருக்கிறது. துறுதுறு முகம், காக்கி உடையில் கெத்து என கோவையில் டாக் ஆஃப் தி டவுனான பஸ் டிரைவர் ஷர்மிளா உடனான ஒரு நேர்காணல்...

ஷர்மிளா... ‘ரைடர் ஷர்மி’ ஆனது எப்படி?

“எனக்கு 7-ம் வகுப்பில் இருந்தே டிரைவிங் மீது ஒரு விருப்பம். அதனால் எனக்கு வாகனங்களின் மீது ஒரு தனிக் காதல் இருந்துகொண்டே இருந்தது. கடைக்கு செல்வதென்றால் கூட நான் வீட்டில் இருக்கும் பைக்கை எடுத்துக்கொண்டுதான் செல்வேன். அப்படித்தான் முதன்முதலில் ஸ்பௌண்டர் பைக்கில் ஆரம்பித்தது என் ரைடு. அதில் நான் அடிக்கடி எங்கள் ஏரியாக்களில் நான் சர்... சர்... என்று போய் வருவதைப் பார்க்கும் அங்கு உள்ள இளைஞர்கள் சிலர் என்னிடம் ‘என்னம்மா ரைடர் மாதிரி சும்மா சர்... சர்ன்னு போய்ட்டு வர்றன்’னு சொல்லி, எனக்கு ‘ரைடர்’னு ஒரு பேரும் வச்சிட்டாங்க. எங்க ஏரியாவுல என் பெயரைச் சொல்லிக்கேட்டால் கூட தெரியாது. ரைடர் என்றால் சொல்லிவிடுவார்கள். அப்போதே அந்த நேரத்தில் இருந்தே எனக்கு வாகனங்களின் மீது அப்படி ஒரு தனி காதல் இருந்தது.

அதிலும் பஸ் மீது ஒரு தீராக் காதல் இருந்தது. அதற்கு காரணம், எங்க வீட்டில் ஆட்டோ இருந்ததால் பெரும்பாலும் எங்களின் பயணம் ஆட்டோவில்தான் இருக்கும். நிறைய பேர் அமர்ந்து செல்லும் அந்த உயரமான பஸ்ஸை பார்த்துக்கொண்டே கடந்துபோகும்போது, நாம எப்போப்பா இப்படி பஸ்ல போவோம்னு என் அப்பாவிடம் கேட்டே விட்டேன். அந்த அளவுக்கு எனக்கு பஸ்ஸில் பயணம் செய்யும் வாய்ப்பு வரவே இல்லை. அதனால் பஸ்ஸின் மீது எனக்கு தனி ப்ரியம் வர இதுவும் ஒரு காரணம். ஆனால் இன்று நான் அந்த உயரமான பஸ்ஸிற்கு டிரைவர் என்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.”

உங்கள் குடும்பம் பற்றி?

“எனது தந்தை மகேஷ். ஆட்டோ டிரைவர். எனது தாய் ஹேமா. இரண்டு தம்பிகள் மற்றும் பாட்டியுடைய ஒரு சிறு குடும்பம். சிறு வயதில் இருந்தே எனக்கு என் தந்தைதான் ரோல் மாடல். அதனால் அவருடைய டிரைவர் பணி எனக்கு மிகவும் பிடிக்கும். இதனால் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. இதையடுத்து எனது தந்தையின் ஆட்டோவை ஓட்டினேன். இதற்கு எனது தந்தையும் உறுதுணையாக இருந்தார். கார் ஓட்ட கற்றேன், பின்னர் படிப்படியாக கார் ஓட்ட கற்று கொண்டேன். இதையடுத்து சிலிண்டர் கொண்டு செல்லும் வாகனத்தில் டிரைவராக பணியாற்றினேன். அப்போதுதான் எனக்கு பெரிய கனரக வாகனங்களையும் ஓட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் அந்த வாகனங்களையும் ஓட்டி லைசன்ஸ் எடுத்தேன்.”

கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான லைசன்ஸ் உரிமம் ஈஸியாக கிடைத்ததா?

“சாதாரணமாக எல்லாம் எடுத்துவிடவில்லை. இரண்டு முறை ஃபெயில் ஆனேன். ஆனாலும் விடாமுயற்சியாக அதில் முயன்று மூன்றாவது முறை பாஸ் செய்து லைசென்சும் வாங்கிவிட்டேன். எனக்கு லைசென்ஸ் அத்தனை எளிதாக கிடைத்துவிடவில்லை. லைசென்ஸ் பெற்று இப்போதுதான் பேருந்தை கையில் எடுத்திருக்கிறேன், ஆனால் 2019 முதலே கோவையில் ஆட்டோ ஓட்டி வந்தேன். நான் கனரக வாகன உரிமம் பெறுவதற்கும் என் அப்பாதான் முழு காரணம். கோவை மாவட்டத்தின் முதல் பெண் தனியார் பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்ற என்னுடைய மற்றும் என் பெற்றோரின் கனவு நிறைவேறியுள்ளது. அன்று ஏளனமாகப் பேசியவர்கள் கூட இன்று ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்.

பெண்ணாக ஒரு 8 மணி நேரத்துக்கும் மேலான இந்தப் பணியில் உங்களின் சிரமங்கள், சாதக பாதகங்கள் என்னென்ன?

“காலையில் 5.30 மணிக்கு பஸ்ஸில் ஏறினேன் என்றால் இரவு 11.45 க்கு தான் இறங்குவேன். பெண்களுக்கே உரித்தான பாத்ரூம் பிரச்சினைகள்தான் நான் எதிர்கொள்ளும் தலையாயப் பிரச்சினை. ஏனென்றால் எல்லா இடங்களிலும் கழிவறைகள் சுத்தமாகப் பராமரிக்கப்படுவதில்லை. சில இடங்களில் தவிர்த்துவிடுவேன். சுத்தமாக இருக்கும் சில இடங்களில் பயன்படுத்திக் கொள்கிறேன். மற்றபடி நாம் மற்ற வேலைகளில் இருப்பதுபோல மொபைல் போன் போன்றவற்றை எல்லா நேரங்களிலும் பயன்படுத்திக்கொள்ள முடியாது. உணவு, உறக்கம் போன்றவற்றை தவிர்ப்பதுதான் இதன் பாதகங்கள். ஆயிரம் பேர் ஆயிரம் விதமா பேசினாலும் இந்த காக்கிச் சட்டையை போட்டதுக்குப் பிறகு முடியாததுன்னு எதுவுமே இல்லை. டிரைவிங் என்றாலே ஆண்கள் கோலோச்சும் துறை இது. இதில் ஒரு பெண்ணாக ஓட்டுநர் ஆனதையே பெரிய விஷயமாக பார்க்கிறேன். என்னைச் சுற்றி இருக்கும் எல்லோரும் நன்றாக பார்த்துக்கொள்வதால் வேலையில் எந்தக் கடினமும் இல்லை.”

ஒரு பெண் டிரைவராக இந்த சமூகம் உங்களை எப்படி எதிர்கொண்டது?

“அவங்கதான் என்னை இந்த அளவு சந்தோஷப்படுத்தி இருக்கிறார்கள். என்னிடம் வியந்து பேசும் பெண்கள் எல்லோருமே, என் பஸ்ஸில் விரும்பி ஏறக் காரணம் நான் ஒரு பெண் என்பதும், நான் செய்யும் பணி பெண்களுக்கான அசாத்திய செயல் என்கிற எண்ணமும் இருப்பதால்தான் அவர்கள் மிகவும் அக்கறையுடன் நடந்துகொண்டு என்னை கொண்டாடவும் செய்கிறார்கள்.

என்னை இன்றுவரை மிகவும் உற்சாகப்படுத்திக் கொண்டிருப்பது மற்ற டிரைவர்கள்தான். அவர்கள் அனைவரும் குடும்பமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் இந்த அளவு சப்போர்ட் செய்வதுதான் என்னை இவ்வளவு தைரியப்படுத்தி வைத்திருக்கிறது. அதுபோக பெரிய பெரிய வால்வோ பஸ்களைக் கூட நிறுத்தி என்னிடம் பேசும் அதன் டிரைவர்கள், டிரைவிங் குயின்னா அது நீங்கதாம்மா என்று பேசி உற்சாகப்படுத்துவது வரை அனைவரும் தங்களை அவ்வளவு இன்வால்வ் செய்து கொண்டிருக்கிறார்கள். மற்றபடி ஒரு பெண்ணாக இந்த சமூகத்தில் பயம் கொள்வதுபற்றி இதுவரை நான் உணரவில்லை. சில டிரைவர்கள் அம்மா, பெண்களுக்கு என்று உள்ள சில மாத பிரச்சினை போன்ற நேரத்தில் நீங்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள். நாங்கள் மாற்று டிரைவர் வைத்து ஓட்டிக்கொள்கிறோம் என்று என்னை தங்களின் வீட்டுப் பெண் போல பார்த்துக்கொள்வது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இந்த சமூகம் எப்படிப்பட்டது என்று பார்க்க வேண்டும் என்றால், என் பஸ்ஸில் வந்து பாருங்கள் தெரியும். ஒரு மினி ஸ்னாக்ஸ் கடை வைத்து விடலாம். அந்த அளவுக்கு யார் என்றே தெரியாத நிறைய மனித உள்ளங்கள் மகிழ்ச்சியில் உற்சாகத்தில் வந்து நிறைய திண்பண்டங்கள், இளநீர், கூல்டிரிங்ஸ் என்று வாங்கி தந்து விட்டு செல்கிறார்கள். பெண்கள் உள்பட அனைவரும் மிகவும் பாராட்டுகிறார்கள். பாதுகாப்பாக செல்லுங்கள் என்று கூறி புளகாங்கிதம் அடைகிறார்கள்.”

டிரைவரின் பணியின் கஷ்டங்கள் என்னென்ன... இன்ஜின் பக்கத்தில் 8 மணி நேரம் இருப்பதால் ஏற்படும் உடல் உஷ்ணம் போன்றவற்றை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

“கஷ்டம் என்று பார்த்தால் நாம் செய்யும் அனைத்து வேலைகளிலும் ஒரு கஷ்டம் இருக்கத்தான் செய்யும். ஆனால், நான் என் வேலையைக் காதலித்து செய்வதால் எனக்கு கஷ்டமாகத் தெரியவில்லை. இது கோடைகாலம் என்பதால் வெயில் மற்றும் வெப்பக் காற்றுகளால் ஏற்படும் பிரச்சினைகளைக் கொஞ்சம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். அதனால் உடலில் உஷ்ணம் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சினைகள் தணிக்க, என்னுடன் பணிபுரியும் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் அனைவருமே எனக்கு இளநீர், மோர், கம்மங்கூழ் போன்றவற்றை வாங்கி தருவார்கள். அவர்கள் அனைவரும் அக்கறையுடன் தங்கள் வீட்டின் பெண்பிள்ளைப் போல என்னை மதிக்கிறார்கள்.”

உங்கள் பஸ் பயணிகள் குறித்து...

“ஒரு பெண் ஓட்டி வரும் பஸ் என்பதால் எல்லோரும் என்னைத் தங்கள் வீட்டுக் குழந்தைகளாகப் பார்க்கிறார்கள். யாராவது படியில் நின்றால்கூட எனக்காக அவர்கள் குரல் கொடுக்கிறார்கள். ஏப்பா மேல வாப்பா அப்படி என்று அதற்கு மற்றவர்களும் மகிழ்ச்சியுடன் உடன்படுவது எனக்கு அவர்கள் மீதும் இந்த பொது சமூகத்தின் மீதும் மிகுந்த மரியாதையை கூட்டியிருக்கிறது.”

உங்களின் ஆசை...

தனிப்பட்ட ஆசை என்று ஒன்று இருந்தது. அது பஸ் டிரைவராக இருப்பதுதான். அது நடந்துவிட்டது. டிரைவராக இருப்பதே எனக்கு அவ்வளவு சந்தோஷம். இதனையே தொடர்வேன். அரசு பஸ்களில் என்னைப் போன்ற பெண்களை டிரைவர்களாக முன்னிறுத்தினால் சந்தோஷப்படுவேன். என்னைப் போல பல பெண்கள் இன்னும் இந்த டிரைவர் தொழிலுக்கு தைரியமாக வருவார்கள். என்னைப் போன்ற பெண் சகோதரிகளுக்கு நான் சொல்லிக்கொள்வது எல்லாம் ஒன்றுதான். இந்த உலகம் நிறைய பேசும். ஏன் தப்பாவே பேசும். அதனை எல்லாம் கண்டு கொள்ளவே கூடாது. கிஞ்சித்தும் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் உங்களை நிரூபிக்கும் தருணங்களில் உங்களைப் பற்றி மற்றவர்கள் உணர்வார்கள். அதுவரை யாரிடமும் நாம் நம்மை நிரூபிக்க வேண்டியதில்லை.”

டேங்கர் லாரி ஓட்டும் கேரளாவைச் சேர்ந்த டெலிசியா

உங்களைப் போல இளம் வயதில் டிரைவர் தொழிலில் இருக்கும் பெண்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

“இளம் வயதில் லாரி ஓட்டும் டெலிசியா என்ற 25 வயது சகோதரியை எனக்கு மிகவும் பிடிக்கும். கேரளாவில் திருச்சூரை சேர்ந்தவர். டேங்கர் லாரியை ஓட்ட உரிமம் பெற்ற கேரளாவில் உள்ள முதல் பெண் டிரைவர். கொச்சியில் இருந்து மலப்புரத்திற்கு சில ஆண்டுகளாக பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஓட்டி வருகிறார். நான் அவரை யூடியூபில் தேடித் தேடிப் பார்த்திருக்கிறேன். இப்போது என்னையும் பலர் யூடியூப்பில் தேடிப்பார்க்கின்றனர் என்பதால் எனக்கும் அதேவிதமான ஒரு சந்தோஷம் கிடைத்திருக்கிறது.”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x