Last Updated : 08 Sep, 2017 09:39 AM

 

Published : 08 Sep 2017 09:39 AM
Last Updated : 08 Sep 2017 09:39 AM

வாழ்க்கை வழிகாட்டி: தற்கொலையை வெல்வோம்!

ணையம் எனும் ஜன்னல் வழியாகப் பலர் உலகைப் பார்த்து வரும் வேளையில், சிலருக்கு அது இறப்புக்கான வழியைத் திறந்துவிடுகிறது. ‘புளூவேல்’ விளையாட்டு அப்படியான ஒன்று. அந்த விளையாட்டை விளையாடியதால், பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வருகிறது. 2, 4, 8, 10 என்று அந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து, மனநல ஆலோசகர்கள் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் பேசிக்கொண்டிருந்த வேளையில், அடுத்த அடியாக வந்தது, அனிதாவின் தற்கொலை! ‘நீட்’ தேர்வுக்கு எதிராகப் போராடிய அனிதாவின் தற்கொலைக்கு ‘மனநல மருத்துவர்களிடம் ஏன் கருத்துக் கேட்கிறீர்கள்’ என்று சிலர் கூறி வரும் வேளையில், தற்கொலைகளின் பின்னணி குறித்து நாம் புரிந்துகொள்வது அவசியமாகிறது.

தற்கொலைதான் தீர்வா?

கடந்த சில ஆண்டுகளில், தற்கொலைகள் ஒரு பெரிய பொதுப் பிரச்சினையாகியுள்ளது. இதனால் இந்தியாவில் ஏராளமான மரணங்கள், சமூகப் பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள், தற்கொலை எண்ணங்கள் போன்றவை பொதுவாகக் காணப்படுகின்றன.

நாகரிகம் எவ்வளவுதான் வளர்ந்தாலும் மனிதன் இன்னும் மாறியதாகத் தெரியவில்லை. அன்று முதல் இன்றுவரை பல்வேறு பிரச்சினைகளுக்கு, தற்கொலைதான் தீர்வாக கருதப்படுகிறது. தற்கொலை செய்துகொள்வோர் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்கூட தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது.

ஒருவர் தற்கொலை மூலம் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார் என்றால், அதைப் பார்த்துப் பலரும் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர் அதைப்பற்றி யோசிக்கிறார்கள் என்கின்றன ஆய்வுகள்.

சமூகத்துக்கும் பொறுப்பு உண்டு

பிரச்சினைகளை எதிர்த்துப் போராடும் குணம் குறைந்து, தற்கொலைதான் தீர்வு என்ற முடிவுக்கு சிலர் வருகின்றனர். சமூகத்தில் பெரும்பான்மையானோர் இத்தகைய சிந்தனைகளை, நடவடிக்கைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆகவே, இந்த எண்ணங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாமலே போய்விடுகின்றன.

ஒருவருக்குத் தற்கொலை எண்ணம் இருப்பதை யாரும் கண்டறிவதில்லை. எனவே அவர் தற்கொலைக்கு முயற்சி செய்யக்கூடும். தற்கொலைகளைத் தடுக்கும் பொறுப்பு மருத்துவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் மட்டுமல்ல, சமூகத்துக்கும் உண்டு. இந்தப் பொறுப்பை நாம் நிறைவேற்றவேண்டுமென்றால், நம்மைச் சுற்றித் தற்கொலை எண்ணத்துடன் இருப்பவர்களை அடையாளம் காண்பதற்கு நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

பள்ளி மாணவர்கள் முதல் அரசு உயர் அதிகாரிகள், நீதிபதிகள்வரை தற்கொலை செய்துகொள்ளும் நபர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. சமீபத்தில் பிஹார் மாநிலத்தின் புக்சார் மாவட்ட நீதிபதி முகேஷ் பாண்டே மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி, முக்கிய பதவி வகிப்பவருக்கும் தற்கொலை எண்ணம் வரக்கூடும் என்பதைப் புரிய வைத்தது.

நவீன காலப் பள்ளிச் சிறுவர்கள், இளைஞர்களுக்கு மைதானம் சென்று வியர்வை சிந்தி விளையாடுதல் என்பது அரிதான விஷயமாக இருந்துவருகிறது. பெரும்பாலும் வீட்டில் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் ஆன்லைனில் பல்வேறு விதமான விளையாட்டுகளை விளையாடிப் பொழுதைக் கழிக்கின்றனர். சில சமயம் உயிரையே கொடுக்கின்றனர். சமீபத்திய உதாரணம் ‘புளூவேல்’.

சில நாட்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பப்படும் நிகழ்ச்சியில் பிரபலமான நடிகை ஒருவர், காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சி செய்யும் காட்சி ஒளிப்பரப்பப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பார்க்கப்பட்ட அந்த நிகழ்ச்சி, தற்கொலை என்ற விதையை அனைவருக்கும் குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மனதில் தூவுவதாக இருந்தது. மனநலம் குறித்த சரியான புரிதலுடன் ஊடகங்கள் செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிற தருணத்தில், டி.ஆர்.பி.க்காக சில ஊடகங்கள் பொறுப்பில்லாமல் நடந்துகொள்கின்றன.

எப்படித் தடுப்பது?

தற்கொலை எண்ணங்களைக் கையாள்வதற்கு மன தைரியம் தேவை. என்னதான் நேர்மறையான தேர்வுகள் இருந்தாலும்கூட வலிகளைத் தாங்கிக் கொள்ள முடியாத தருணம் ஒருவருக்கு வரக்கூடும். ஒருவர் தன் மனக் கட்டுப்பாட்டின் வரம்பை மீறும்போது தற்கொலை எண்ணங்கள் தோன்றும். அதை அவர் கையாள வேண்டும்.

தனிமையில் இருப்பது தற்கொலை எண்ணத்தை தூண்டுவதாக அமையும். எனவே குடும்பத்தாருடன் நேரத்தைக் கழிக்க வேண்டும். நண்பர்களுடன் வியர்வை சிந்தும் அளவுக்கு நன்றாக ஓடியாடி விளையாடவும் வேண்டும். மேலும் எதிர்மறையான எண்ணங்களைப் போக்க சந்தோஷமான எண்ணங்களை மனதில் அதிகமாக அசைபோட வேண்டும். இதனை மேம்படுத்த நேர்மறையான மக்களுடன் பழகி எதிர்மறையாகச் சிந்திப்பதைத் தவிர்க்க வேண்டும்.

கட்டுரையாளர், ஆசிரியர் மற்றும் தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருபவர்
தொடர்புக்கு: anandt.tanand@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x