

ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டலில் 2008-ம் ஆண்டிலிருந்து உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் ஆண்டுதோறும் ஏப்ரல் 2-ம் நாள் அனுசரிக்கப்படுகிறது. 2023-ம் ஆண்டில் 16-வது முறையாக இதை உலக நாடுகள் கடைப்பிடிக்கின்றன. “வீடு, பணியிடம், கலைகள் மற்றும் கொள்கைகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு நிலைகளில் உள்ள ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்களின் பங்களிப்பைப் போற்றி ஏற்றுக்கொள்ளும்” விதத்தில் இந்த ஆண்டிற்கான நிகழ்வுகளைத் திட்டமிட ஐ.நா. பரிந்துரைத்துள்ளது.
இது, குணப்படுத்துதல் மற்றும் நமக்கேற்ப அவர்களை மாற்றுதல் என்ற நிலைப்பாட்டில் இருந்து மீண்டு அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல், ஆதரவளித்தல், அவர்களை உள்ளடக்குதல் மற்றும் அவர்களுக்கான உரிமைகளுக்காக வாதாடுதல் என்ற நிலைப்பாட்டிற்கு நாம் மாறுவதன் அவசியத்தை உணர்த்துகிறது. இந்த மாற்றம் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், உலகெங்கிலும் உள்ள பல்வேறு வகையான நரம்பியல் பன்முகத்தன்மை கொண்டவர்களின் வாழ்வையும் உணர்த்தும். மேலும், இந்த முன்னெடுப்பு, நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை நாம் அடைவதற்கு அவர்களின் பங்களிப்பை உறுதி செய்ய பெரும் பங்காற்றும்.
ஆனால், இன்றளவும் ஆட்டிசம் உள்ளிட்ட பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகளின் தனித்திறமைகள் முறையாக புரிந்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு தொழிற் பயிற்சி திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. எனினும், பயிற்சி பெற்றவர்களுக்கான பணி வாய்ப்புகள் போதிய அளவு இல்லை மற்றும் அவை பெரும்பாலும் பணிப்பாதுகாப்பற்ற தற்காலிக வாய்ப்புகளாகவே உள்ளன. இதற்கு, மாற்றுத்திறனாளிகளை மனித சமூகம் முழுமையாக ஏற்றுக் கொள்ளாததே காரணமாகும்.
இவ்வாறு நாம் மாற்றுத்திறனாளிகளின் உழைப்பை முறையாகப் பயன்படுத்தாததால், வளரும் நாடுகள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆண்டுதோறும் ஏறத்தாழ ஏழு விழுக்காட்டை இழக்கின்றன என்று பன்னாட்டு தொழிலாளர்கள் அமைப்பான ஐ.எல்.ஓ குறிப்பிடுகிறது. இது அரசுகள் மற்றும் உற்பத்தியாளர்களால் மிகவும் கவனிக்க வேண்டிய கருத்தாகும். இதற்கு, சம வாய்ப்பை ஏற்படுத்துவதைக் காட்டிலும் ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளின் இயல்பு மற்றும் திறனுக்கேற்ற பொருத்தமான வாய்ப்பை உறுதி செய்வது அவசியம்.
குறிப்பாக, ஆட்டிசம் மாற்றுத்திறனாளிகள் தொடர்பு கொள்ளுதல், சமூக உறவைப் பேணுதல், மற்றும் குறிப்பிட்ட சில பொருட்களின் மீது மட்டும் கவனம் செலுத்துதல் போன்ற சிறப்பியல்புகளுடன் உள்ளனர். இவர்களுக்கு, மற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஏற்கெனவே உள்ள பொதுவான தொழிற்பயிற்சிகளை வழங்கக்கூடாது. இவர்களின் தனி தன்மைக்கேற்ப மற்றும் அவர்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்கெடுக்கும் வகையிலும் புதிய பயிற்சிகளைத் திட்டமிட்டு உருவாக்கி வழங்க வேண்டும்.
பொதுவாக, நரம்பியல் பன்முகத்தன்மை மற்றும் அறிதிறன் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தமது வாழ்வின் பெரும்பாலான பகுதியை அவர்களுக்கான சிறப்புப் பள்ளிகள் மற்றும் காப்பகங்களில் கழிக்கின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்காக முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளின் ஒற்றை நோக்கம் அவர்களை பிறரின் துணையின்றி தாமே தனது வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு உயர்த்துவதே ஆகும். இந்த நோக்கத்தை நம்மால் எட்ட முடியாமைக்கு முக்கியக் காரணம், செய்யப்படும் அனைத்தும் அவர்களுக்காக செய்யப்படுகின்றனவே தவிர அவர்களுடன் இணைந்து செய்யப்படுவதில்லை.
இதற்கு ஒற்றை தீர்வாக உள்ளடக்கிய சமுதாயத்தைக் கட்டமைப்பதே ஆகும். அதில். மாற்றுத்திறனாளிகள் முழுமையான பங்கேற்பாளர்களாக வாய்ப்பளிக்க வேண்டும். எப்படி சமத்துவபுரம், உழவர் சந்தை போன்ற முற்போக்கான திட்டங்கள் புதிய நம்பிக்கையைக் காட்டியதோ, அது போல நாமும் அரசும் இணைந்து உள்ளடக்கிய சமூக கிராமங்கள் மற்றும் நகரங்களைக் கட்டமைக்க வேண்டும். இது, மாற்றுத்திறனாளிகள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர்த்து அரவணைக்கவும், அவர்களை நாட்டின் உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பங்களிப்பவர்களாக உருவாக்கவும் உதவும்.
- முனைவர் இரா.மு.தமிழ் செல்வன் | கட்டுரையாளர்: சிறப்புக் கல்வி உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை.
தொடர்புக்கு: tamil.edn@gmail.com