

சிவகங்கை: சிவகங்கையில் ரமலான் நோன்பு மேற்கொள்ளும் ஆயிரம் ஏழை முஸ்லிம்களுக்கு, ஒரு குடும்பம் தினமும் இலவசமாக பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்கி வருகிறது.
மார்ச் 24-ம் தேதி முதல் ரமலான் நோன்பை முஸ்லிம்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள், நோன்பை தொடங்கு வதற்கு முன்பாக ஸஹர் என்ற உணவை அதிகாலையில் உண்பது வழக்கம். இந்நிலையில், நோன்பு மேற்கொள்ளும் ஏழை முஸ்லிம்களுக்கு உதவும் வகையில், சிவகங்கை இந்திரா நகரைச் சேர்ந்த அன்வாரிய்யா என்ற குடும்பத்தினர் இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர்.
இக்குடும்பத்தினரே பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகளை தயாரித்து வழங்குகின்றனர். உணவு தேவைப்படும் முஸ்லிம்கள், அவர்களது வாட்ஸ் ஆப் அல்லது மொபைல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால், உணவு வழங்கப்படுகிறது. தற்போது, தினமும் ஆயிரம் பேருக்கு வழங்கி வருகின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இருப்பினும், அன்வாரிய்யா குடும்பத்தினர் எந்தவித கஷ்டத்தையும் பார்க்காமல், இந்த சேவையை செய்து வருகின்றனர். இந்த குடும்பத்தினர் ஏற்கெனவே, கரோனா காலக்கட்டத்தில் தினமும் அரசு மருத்துவமனையில் இருந்த நோயாளிகளுக்கு இலவசமாக உணவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அன்வாரிய்யா குடும்பத்தினர் கூறுகையில், உணவுகளை நாங்களே தயாரிக்கிறோம். உணவு தேவை குறித்து முன்கூட்டியே தெரிவித்தால் போதும், நாங்கள் வழங்கிவிடுவோம். ஏழைகள், மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள், முதியவர்களுக்கு உணவு வழங்குகிறோம். யாரையும் காக்க வைக்கக் கூடாது மற்றும் கூட்ட நெரிசல் ஏற்படக் கூடாது என்பதற்காக, உணவை பார்சல் செய்து வழங்குகிறோம், என்றனர்.