

கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாங்குளங்கரா தேவி கோயிலில் பெண்கள் மட்டுமே வழிபடும் வழக்கம் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்களும் வழிபட விரும்பி உள்ளனர். அதற்காக, பெண்கள் போல் வேடமணிந்து பூச்சூடி கோயிலுக்குள் பூஜைகள் செய்யலாம் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கோயில் சுயம்பு தேவி கோயில் என்றழைக்கப்படுகிறது. எனினும் கொட்டாங்குளங்கரா தேவி என்ற பெயர் பிரபலமாக உள்ளது. இந்தக் கோயிலில் மார்ச் மாதம் சமயவிளக்கு என்ற பெயரில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். சுமார் 19 நாட்கள் இந்த திருவிழா மிக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு திருவிழாவில் பெண்கள் போல் வேடமணிந்து நூற்றுக்கணக்கான ஆண்கள் பங்கேற்றனர். கோயிலில் விளக்குகள் ஏற்றி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். மேலும், இத்திருவிழாவில் பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த திருவிழா தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
கடந்த 2 நாட்களாக சேலை அணிந்து, தலை முடி வைத்து பூச்சூடி, நகைகள் அணிந்து மீசை, தாடியை மழித்து பெண்கள் போல் முகத்தில் ஒப்பனை செய்து ஏராளமானோர் கோயிலுக்கு வந்தது வித்தியாசமாக இருந்தது. பெண்கள் யார், ஆண்கள் யார் என்று அடையாளம் தெரியாத அளவுக்கு கச்சிதமாக பெண் வேடமிட்டு ஆண்கள் கோயிலில் வழிபாடு நடத்தினர்.
கொட்டாங்குளங்கரா தேவி கோயிலில் பெண்கள் வேடமிட்டு வந்த ஆண்களை புகைப்படம் எடுத்து ரயில்வே அதிகாரி ஆனந்த் ரூபனகுடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த படம் வைரலாகி வருகிறது. அதை பார்த்து பலரும் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், சிறந்த முறையில் பெண் வேடமணிந்து வந்தவர்களுக்கு கோயிலில் போட்டியும் வைக்கப்பட்டுள்ளது. அதில், ஆனந்த் வெளியிட்ட புகைப்படத்தில் இருக்கும் பெண் வேடமணிந்த ஆண், முதல் பரிசு பெற்றதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ‘இவருக்கு ஒப்பனை செய்தவருக்கு ஆஸ்கர் விருது வழங்க வேண்டும்’ என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். ‘டோலிவுட், பாலிவுட், கோலிவுட் என எந்ததிரைப்பட கதாநாயகியும் இவருக்கு ஈடாக மாட்டார்கள்’’ என்று மற்றொருவர் கூறியுள்ளார்.
இந்த கோயிலில் பெண் வேடமிட்டு ஆண்கள் வழிபடும் வழக்கம் வந்தது குறித்து நாட்டுப்புறக் கதைகள், செவி வழி கதைகளும் நிலவுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்னர் மாடுகள் மேய்த்த சிறுவர்கள், விளையாட்டுத்தனமாக பெண் போல வேடமணிந்து , அவர்கள் கடவுளாகக் கருதும் கல்லுக்கு தேங்காய், பூக்களை காணிக்கையாக வைத்து வழிபட்டுள்ளனர்.
அப்போது திடீரென கடவுள்தேவி காட்சி அளித்ததாகவும், அதன்பின்னர் அங்கு கோயில்உருவானதாகவும் மக்கள் நம்புகின்றனர். அதன்பிறகு தான் பெண்போல ஆண்கள் வேடமணிந்து வழிபடும் வழக்கம் வந்துள்ளது.