

மதுரை; கடந்த ஓர் ஆண்டில் உலகம் முழுவதும் 1.6 கோடி பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று காசநோய் தினத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேலு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவத் துறையும், மதுரை மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டமும் இணைந்து மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தீவிர காச நோய் கண்டறியும் முகாமை நடத்தினர். இந்த மருத்துவ முகாமை மருத்துவமனை முதல்வர் ஏ.ரத்தினவேலு தொடங்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் வி.ஆர்.கணேசன் முன்னிலை வகித்தார்.
இந்த மருத்துவ முகாமில் காசநோய் அறிகுறிகளான தொடர் இருமல், மாலை நேரக்காய்ச்சல், சளியில் ரத்தம் கலந்து வருதல், உடல் எடை குறைதல் மற்றும் பசியின்மை போன்ற அறிகுறிகள் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு இலவச சளி மற்றும் நெஞ்சக எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் டீன் ரத்தினவேலு பேசியதாவது: "ஆண்டுதோறும் மார்ச் 24-ம் தேதி உலக காசநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. காசநோயாளிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இந்த நோய் தினத்தில் காசநோய் சோதனைகள் மற்றும் சிகிச்சை முறைகள் நடத்தப்படுகிறது.
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஒரு கோடியே 6 லட்சம் மக்கள் காசநோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 16 லட்சம் மககள் மரணம் அடைந்து இருக்கின்றனர். இதை தடுப்பதற்கு ஆரம்ப கால கட்டத்திலேயே இந்த நோயை கண்டறிந்து அறிகுறிகள் உள்ளவர்களுக்கு இலவசமாக கூட்டு சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. அதனால், இந்த நோயிலிருந்து நோயாளிகள் பூரண குணம் பெற்று நோய் பாதிப்பை குறைக்க முடியும்" என்று அவர் கூறினார்.