

ரமலான் என்பதன் பொருள் கரித்தல், எரித்தல் என்பதாகும்; கடந்தகால வாழ்வில் ஏற்பட்ட மனிதர்களின் பாவங்கள் கரிந்து போகிற மாதம் இது.
நோன்பை குறித்து இறைவேதமாம் திருக்குர்ஆன் இப்படி வர்ணிக்கிறது:
"இறை நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்படுகிறது (எவ்வாறெனில்) உங்கள் முன் உள்ள கூட்டத்தார் மீது விதியாக்கப்பட்டது போன்று; ஏனெனில் நீங்கள் இறையச்சம் கொள்வதற்காக. {2:183}
இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டபடி மனிதன் இறையச்சம் பெறுகிற விஷயத்தில் நோன்பு மிக முக்கியமானதாகும். இந்த நோன்பின் வழியாக மனிதன் தன் உணர்வுகளின் மீது ஆளுமை பெறுகிறான். இந்த ஆளுமைதான் ‘தக்வா’ என்று சொல்கிற இறையச்சத்தின் ஆணிவேராகும்.
பொதுவாகவே தன்புற உறுப்புகளை மிகச்சரியாக கையாளுகிற மனிதன், தன் உணர்வு மற்றும் இச்சைகளில் ஆளுமை செலுத்த இயலாமல் ஆகிவிடுகிறான் அல்லது அதை மறந்து இருக்கிறான். அந்த ஆளுமையை நோன்பு நமக்கு கற்றுத் தருகிறது.
வெறும் பசித்திருப்பது மட்டும் நோன்பின் நோக்கமன்று, அதன் ஊடாக மனிதனின் முழுகுணமும் மாற்றி அமைக்கப்படுவதைத்தான் இஸ்லாம் விரும்புகிறது. ஏனெனில், பெருமானார் (ஸல்) அவர்களின் ஒருகூற்று நம் அகக்கண்களைத் திறக்கிறது.
“எவன் ஒருவன் பொய் பேசுவதையும், அதையே செயலாக செய்வதையும் விடவில்லையோ அவன் பகல் முழுவதும் பசித்திருப்பதும், குடிக்காமல் இருப்பதும் இறைவனுக்கு எந்த தேவையும் இல்லை”.
அதுபோன்ற நம் வாழ்வில் உள்ள செயல்களை திரும்பிப் பார்ப்பதற்குண்டான ஒரு சந்தர்ப்பம்தான் நோன்பு.
ரமலானுடைய காலங்களில் நோன்பு வைக்கக்கூடிய ஒருவர்தம்மிடம் ஏதாவது தவறான பழக்கம் இருந்தால் அதை விட்டுவிட வேண்டும். உதாரணமாக பீடி, சிகரெட், மது போன்ற லாகிரி பொருட்களை முற்றிலுமாக இந்த ரமலானில் விட்டுவிடுகிறோம்.
ஆனால், ஹராமான சொல், செயல், பார்வைகளை விட்டு தவிர்த்திருப்பதற்கு அழகிய ஒரு வழியை அல்லாஹ் நமக்கு காண்பிக்கிறான். அதாவது, உங்களுக்கு ஹலாலாக உள்ள ஆகுமாக்கப்பட்ட பொருளைத் தவிர்த்திருங்கள் என்று இறைவன் கூறுகிறான்.
உலகில் எவ்வளவு விலைஉயர்ந்த பொருளாக இருந்தாலும், அழகிய பொருளாக இருந்தாலும் அது நமக்குரியது என்று ஆகிவிட்டால் அதன் அருமைகளை நாம் மறந்து போகிறோம். மற்றதைத் தேட ஆரம்பிக்கிறோம்.
ஹலாலான அழகிய மனைவி உடன் இருக்க அதைவிடுத்து மற்ற அந்நியப் பெண்களை அவன் கண்கள் தேடுகிறது. அனுமதிக்கப்பட்ட மனைவியை தொடுவதற்கும், இச்சை பேச்சுகள் பேசுவதற்கும் நோன்பு தடையை ஏற்படுத்தும்போது மனிதனின் அந்நியப் பெண்கள் மீதான போதை தெளிகிறது.
கெட்ட பேச்சுகளில் பழக்கமான நாவு அந்த போதையிலே திளைத்திருக்கிறது. நல்ல விஷயங்களையே ரமலானில் குறைத்து பேசவும். யாராவது சண்டையிட வந்தால் ‘நான் நோன்பாளி’ என்று சொல்லவும் என்பதைக் கொண்டு பேச்சில் உள்ள போதையை நோன்பு உணரவைக்கிறது.
இதை எல்லாம்விட இன்றைக்கு இளையவர், பெரியவர் என்ற வித்தியாசம் இல்லாமல். எல்லோருடைய நேரத்தையும் மொத்தமாகத் தின்று கொண்டிருப்பது வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள்.
இன்றைக்கு இருக்கும் எல்லா போதைகளையும் விட மோசமான போதை இதுதான். ஆக இவை எல்லாவற்றையும் விட்டுவிட இந்த ரமலானின் நாம் ஒரு உறுதி எடுக்க வேண்டும்.
ரமலான் என்பது ‘அமல்களின் மாதம்’. அது படிக்கிற மாதம் அன்று. அதில் அதிகமாககுர்ஆன் ஓதுவது, ஸலவாத்சொல்வது, என்ற நல்லறங்களால் நம் மறுமை ஏடு நிரப்பப்பட வேண்டும். மேலும், ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் ‘பொறுமையின் மாதம்’ என்றுவர்ணித்தது போன்று பொறுமையாகவும், அமைதியாகவும் இருந்து நம் குணநலன் மாறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
கட்டுரையாளர்:
பேராசிரியர் அ.முஹம்மது
இஸ்மாயில் ஹஸனி
ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி.