45 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் தனது ஆசிரியரை சந்தித்த மலேசியாவின் சர்வா மாநில துணை முதல்வர்!

ஆசிரியருடன்  ஆவான் டெங்கா
ஆசிரியருடன் ஆவான் டெங்கா
Updated on
1 min read

கும்பகோணம்: கிழக்கு மலேசியாவிலுள்ள சர்வா மாநில துணை முதல்வர் ஆவான் டெங்கா ராஜகிரியிலுள்ள தனது ஆசிரியரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

பாபநாசம் வட்டம், ராஜகிரி, கீழ தெருவைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப் (89). இவர் மலேசியாவில் கடந்த 55 ஆண்டுகளாக, மலேயா மற்றும் அரபி பாடப் பிரிவின் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், இவரிடம் படித்த கிழக்கு மலேசியாவில் உள்ள சா்வா மாநில துணை முதல்வரான ஆவான் டெங்கா இன்று தனது குடும்பத்தினருடன், தனக்குப் பாடம் நடத்திய ஆசிரியர் அப்துல் லத்தீப்பின் வீட்டிற்கு வந்தார்.

அவரை, அங்குள்ளவர்கள் மரியாதை செலுத்தி, வரவேற்றனர். பின்னர், வயோதிக காரணமாக அறையிலிருந்த ஆசிரியர் அப்துல் லத்தீப்பை கட்டிப்பிடித்து, நலம் விசாரித்தார் டொங்கா. பின்னர், தனது பதவியையும், குடும்பத்தாரை பற்றி அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “சாரவக் பகுதியில் கடந்த 1968-ம் ஆண்டில் எனது பள்ளி ஆசிரியராக அப்துல் லத்தீப் இருந்தார். அவரை கடந்த 45 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் சிறப்பான ஆசிரியராக பணியாற்றினார். இவர் எனக்கு ஆசிரியர் மட்டும் அல்ல, எனது குடும்பத்தில் ஒருவரை போலப் பார்க்கிறேன். இந்த வாய்ப்பை எனக்கு கடவுள் கொடுத்த வரமாக பார்க்கிறேன். அவர் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பது என ஆசையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in