

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிக்கு தக்க சமயத்தில் உதவி உள்ளார் காவலர் ஒருவர். இது குறித்து அறிந்த நெட்டிசன்கள் அவரது செயலை பாராட்டி வருகின்றனர்.
அந்த மாநிலத்தில் பொதுத் தேர்வு எழுதும் மாணவி ஒருவர், தனது தேர்வு மையத்திற்கு பதிலாக வேறொரு மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரது ரோல் நம்பரை சரி பார்த்த போதுதான் தேர்வு மையம் மாறி வந்த விவரத்தை அவர் அறிந்து கொண்டுள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளார் அந்த மாணவி. மாணவியின் தந்தையும் அந்த மையத்தில் மகளை இறக்கிவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், மாணவி தவிப்பதை பார்த்த அருகில் இருந்த காவலர் ஒருவர் விவரத்தை கேட்டுள்ளார். அந்த மாணவியும் நடந்ததை விவரித்துள்ளார். உடனடியாக சிறிதும் யோசிக்காமல் அந்த காவலர், மாணவியை அழைத்துக் கொண்டு சரியான தேர்வு மையத்திற்கு சென்றுள்ளார். குறித்த நேரத்தில் அங்கு சென்று, மாணவி தேர்வெழுதவும் செய்துள்ளார். இது குறித்து அறிந்து கொண்ட நெட்டிசன்கள் நல் உள்ளம் கொண்ட அந்த காவலரை போற்றி வருகின்றனர்.
மாணவி தேர்வு எழுத வேண்டிய தேர்வு மையம் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்துள்ளது. அதை கருத்தில் கொள்ளாமல் தக்க சமயத்தில் துரிதமாக உதவியுள்ளார் அந்த காவலர். இதன் மூலம் அந்த மாணவியின் எதிர்காலத்தை வசந்த காலமாக மாற்றியுள்ளார் அவர்.