

மதுரை: ‘‘நுரையீரல் புற்றுநோய்களுக்கு 90 சதவீதம் புகைப்பிடித்தலே முக்கிய காரணமாக உள்ளது’’ என்று நுரையீரல் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த காலத்தில் புற்றுநோய் பற்றிய மக்களிடம் பெரிய விழிப்பணர்வு இல்லை. அதனால், இந்த நோய் வந்தாலே பெரும் அச்சம் கொள்வார்கள். தற்போது புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்துள்ளது. அதற்கான உயர் காக்கும் சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளிலேயே தாராளமாக கிடைப்பதால் தற்போது இந்த நோய் பாதித்தவர்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு அச்சமின்றி வாழ பழகிவிட்டார்கள்.
நுரையீரல் புற்றுநோய்க்கு புகைப்பிடித்தல் ஒரு காரணமாக இருந்தாலும், காற்று மாசும், பணிபுரியும் இடங்களும் இந்த நோய் ஏற்படுவதற்கு காரணங்களாக உள்ளன. சுகாதாரமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது போன்றவற்றால் நுரையீரல் புற்றுநோயில் இருந்து விலக்கி இருக்கலாம்.
இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நுரையீரல் மருத்துவ நிபுணர் டாக்டர் இளம்பரிதி கூறியதாவது: நுரையீரலில் உள்ள சாதாரண செல்கள் வழக்கத்திற்கு மாறாக அசாதாரண செல்களாக மாறும்போது நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்தியாவில் புற்றுநோய் ஏற்படுவோரில் 6 சதவீதம் பேர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, 100 புற்றுநோயாளிகளில் 6 பேர் நுரையீரல் புற்றுநோயாளிகளாக உள்ளனர்.
அதுபோல், புற்றுநோயால் இறப்பவர்களில் 8 சதவீதம் பேர் நுரையீரல் புற்றுநோயாளிகளாக உள்ளனர். இந்தியாவில் ஆண்டிற்கு 8 லட்சம் நுரையீரல் புற்றுநோயாளிகள் இறக்கிறார்கள். ஆண்டுதோறும் 1.2 மில்லியன் புதிய நுரையீரல் புற்றுநோயாளிகள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். நுரையீரல் புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. நுரையீரல் புற்றுநோயின் பொதுவான அறிகுறிகளில் இருமல், சுவாசிப்பதில் சிரமம், இருமல் இரத்தம், மார்பு வலி மற்றும் கரகரப்பான குரல் ஆகியவை அடங்கும்.
இந்த அறிகுறிகள் அனைத்தும் நுரையீரல் புற்றுநோயாக இல்லாத நிலைகளாலும் ஏற்படலாம். ஆனால், இந்த அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை அணுகி சிகிச்சை, ஆலோசனை பெறுவது நலம். புகைப்பிடித்தல் நுரையீரல் புற்றுநோய்க்கான மிக முக்கியமான ஆபத்து காரணியாக கருதப்படுகிறது. 90 சதவீதத்திற்கும் அதிகமான நுரையீரல் புற்றுநோய்களுக்கு புகைபிடித்தல் முக்கிய காரணமாக திகழ்கிறது.
நச்சு இரசாயனங்கள் பயன்பாடு பணியிடங்களில் பணிபுரிவது நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. நுரையீரல் புற்றுநோய் பாதித்தவர்கள் பல்வேறு காரணங்களில் இந்த நோயை பெற்றாலும், இன்னும் புற்றுநோய்க்கான காரணம் தெரியாத சில நோயாளிகளும் உள்ளனர். அதற்கான காரணத்தை இன்னும் கண்டுபிடிக்க முடிவயில்லை. நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை சிடி ஸ்கேன் மூலம் செய்யலாம். சந்தேக அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை சந்தித்து நுரையீரல் பரிசோதனை செய்வதால் ஆரம்பகாலத்திலே கண்டறிந்தால் இந்த நோயை குணமடைவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம்.
யார் நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை செய்ய வேண்டும்?: தற்போது புகைப்பிடிப்பவராக இருந்தாலோ அல்லது கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக புகைபிடிப்பவர்களாக இருந்தாலோ நுரையீரல் புற்றுநோய்க்கான பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அப்படி பரிசோதனை செய்யும்போது நுரையீரல் பாதிப்பு எதுவும் இல்லாமல் இயல்பாக இருந்தாலும், ஆண்டிற்கு ஒருமுறையாவது சிடி ஸ்கேன் செய்ய வேண்டும். நுரையீரல் புற்றுநோய் பயாப்ஸி பரிசோதனை மூலம் உறுதி செய்யப்படுகிறது.
புற்றுநோய் எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பதை கண்டறிந்து மருத்துவர்கள் அதற்கேற்ப சிகிச்சை அளிப்பார்கள். அந்த சிகிச்சை நுரையீரல் புற்றுநோயின் பாதிப்பு கட்டத்தை பொறுத்தது. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறைகளில் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.
சில நேரங்களில் புற்றுநோயை அகற்ற அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்கப்படலாம். புற்றுநோய் செல்களை அழிக்க கதிர்வீச்சு சிகிச்சை பயன்படுத்தப்படலாம். கீமோதெரபி சிகிச்சை புற்றுநோய் செல்களைக் அழிக்கவும், புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்க பயன்படுத்தலாம். இவ்வாறு தெரிவித்தார்.