

மதுரை: மதுரையில் அரசு பள்ளியில் தற்காப்பு பயிற்சி பெறும் மாணவிகளுக்கு ஊட்டச்சத்துக்காக உலர் பழங்கள் வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலையான கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, சிலம்பம் கற்பிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் மதுரை மாவட்டம் திருமோகூரில் உள்ள மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 28 மாணவிகள் சிலம்ப பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு வாரம் 2 நாள் சிலம்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் திருமோகூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.பி.ஆர்.அண்ணாமலை, மாணவிகளுக்கு சிலம்பக் கம்பு வாங்கி கொடுத்துள்ளார். தற்போது சிலம்பம் கற்ற வரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும், மாணவிகளின் ஊட்டச்சத்தை அதிகரிக்கவும் சிலம் பயிற்சியின்போது மாணவிகளுக்கு பேரிச்சை, திராட்சை என பல்வேறு உலர் பழங்கள் வழங்கப்படுகிறது.
பள்ளியில் இன்று நடைபெற்ற சிலம்ப பயிற்சியில் மாணவிகளுக்கு ஊராட்சித் தலைவர் ஏ.பி.ஆர்.அண்ணாமலை உலர் பழங்களை வழங்கினார். தலைமை ஆசிரியை கலைச்செல்வி, சிலம்ப பயிற்சியாளர் சிவனேஷ்வரி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.