Last Updated : 08 Mar, 2023 07:10 PM

Published : 08 Mar 2023 07:10 PM
Last Updated : 08 Mar 2023 07:10 PM

“அன்று முகம் காட்டாவே அஞ்சிய நான் மீண்டு வந்தது எப்படி?” - ‘காதல்’ சரண்யாவின் உத்வேகப் பயணம் | Women's Day Special

“நான் ஒரு பெண் என்பதால்தான் எனது அத்தனை பிரச்சினைகளில் இருந்தும் என்னை தைரியமாக மீட்டுக்கொண்டு வந்திருக்க முடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஒரு நடிகையாக, திடீரென கூடிவிடும் உடல் எடை அதிகரிப்பின் மூலம் உண்டாகும் மன அழுத்தங்களை அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடியாது. ஹைப்போதைராய்டிஸமும் பிசிஓஎஸ் பிரச்னைகளிலும் பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டு வந்திருக்கிறேன்” என்று தன்னம்பிக்கை அனுபவங்களைப் பகிர்கிறார் ‘காதல்’ சரண்யா.

“எனக்கு அப்பா இல்லை. அம்மாவும் நானும் மட்டும்தான். அம்மா சின்ன வயசிலேருந்து என்னை நடிப்பு உலகிற்குள் கூட்டி வந்துவிட்டார். ஆனாலும் எனக்கென்னவோ அப்போது சினிமா துறையில் பெரிதாக ஈடுபாடு வரவேயில்லை. ‘காதல்’, ‘பேராண்மை’ மாதிரியான பெரிய படங்கள் அமைஞ்சபோதும் அடுத்து என்னனு வழிகாட்ட யாருமில்லை. சரியான படங்களைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை.

ஃபேமிலி சப்போர்ட்டோ, பெரிய பொருளாதார பின்னணியோ இல்லை. என்னை நானே பத்திரமா பார்த்துக்க வேண்டிய கட்டாயம், அதனால நான் விழுந்து விழுந்து எல்லா விஷயங்களையும் தனியாக கத்துக்கிட்டேன். அந்த நேரத்தில் சில சூழல் காரணமாக வீட்டை விட்டு வெளியே வர வேண்டியதாகி விட்டது. அதன்பிறகு, பேயிங் கெஸ்ட்டா தங்கறது, ஃப்ரெண்ட்கூட ரூமை ஷேர் பண்றதுன்னு சில நாட்கள் என்று கழிந்த அந்த நேரத்தில்தான், எதிர்பாராத சில பிரச்சினைகளை நான் சந்தித்தேன்.

உடைந்த தன்னம்பிக்கை: அந்த நேரத்தில் ஸ்ட்ரெஸ், தலைமுடி உதிர்வு, வெயிட் பிரச்சினைனு நிறைய கஷ்டங்களை அனுபவிச்சேன். மூணே மாசத்துல 20 கிலோ வெயிட் போட்டேன்... ஏதோ பிரச்சினைனு மட்டும் புரிஞ்சது, முதல்கட்டமாக படங்கள்ல நடிக்கிறதை நிறுத்தினேன். நல்ல வாய்ப்புகளை மறுத்தேன். டாக்டர்கிட்ட செக்கப்புக்குப் போனபோதுதான் எனக்கு ஹைப்போதைராய்டிஸமும் பிசிஓஎஸ் பிரச்னையும் இருக்கிறது தெரிஞ்சது. 100 கிலோவுக்கு மேல வெயிட் ஏறினதும் வீட்டைவிட்டு வெளியில வர்றதையே குறைச்சுக்கிட்டேன். நடிக்கிறதை நிறுத்தினதால தட்பு வட்டமும் விலகிப் போயிடுச்சு. தாழ்வு மனப்பான்மை அதிகமானது. ஒரு நடிகை, திடீர்னு இப்படி எக்கச்சமா வெயிட் போட்டு, வெளியில நடமாடினா, சமூகம் கிண்டல் பண்ணுமே என்று பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கினேன். சோஷியல் மீடியாவிலும் அமைதியானேன். நம்பரை மாத்தினேன். இப்படி எல்லா வகையிலும் என்னை நானே தனிமைப்படுத்திக்கிட்டேன்.

எந்த நேரத்திலும் பெண்ணுக்கு குடும்பம் பெரிய சப்போர்ட். ஆனா, டீன் ஏஜ்ல அது மிஸ் ஆகும்போது அந்தப் பெண் நிலைகுலைஞ்சு போயிடுவா. அப்படி ஒரு சூழலில் தான் யாரும் இல்லாமல் நான் இருந்தேன். அந்த நேரத்தில் எனக்கு டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் சார் பெரிய துணையாக இருந்தார். என் தாழ்வு மனப்பான்மையால் ஓடி ஒளிந்து கொண்டிருந்த என்னை அவர் ஆபீஸில் வேலை போட்டுக் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தினார். ஆனாலும், நான் சில நேரங்களில் வேலைக்குக்கூட செல்லாமல் ஓடி ஒளிந்து கொண்டுதான் இருந்தேன். அப்போது, ஒருமுறை அவர் என்னை ஸ்ட்ரிக்டாக அழைத்து கண்டித்தார். அதுவும் அவர் வேலை தந்ததே என்னை அந்த தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளியே கொண்டுவர வேண்டும் என்பதற்குதான். அதனால்தான் வேலையில் சேர்த்தேன். அதற்கும் நீ வராமல் வீட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டால், உன் வேலையை நீ செய்யவில்லை என்றால் நான் எப்படி உனக்கு சம்பளம் தருவேன் என்றார். இனி என் ஆபீஸின் வரவேற்பறையில் நீதான் இருக்கவேண்டும். ஸ்ருதி ஹாசனுக்கு நீதான் உடைகள் செலக்ட் பண்ண வேண்டும். அனைவரிடமும் நீதான் பேச வேண்டும் என்று என்னை முன்னெடுத்து என் தயக்கங்களை உடைத்துக்கொண்டே சென்றவர் அவர்தான். அதன்பிறகுதான் நான் அந்த தயக்கத்தை விட்டு வெளியே வந்தேன்.

எல்லாரும் கரோனா காலகட்டங்களான கடந்த இந்த 3 வருடங்களாகத்தான் மாஸ்க் அணிகிறார்கள். ஆனால் நான் 2015-ல் இருந்தே மாஸ்க் அணிகிறேன். என் உடல் எடை அதிகரிப்பின் காரணமாக என் முகமே மாறிப் போய்விட்டது. ஒரு நடிகையாக பார்ப்பவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம், எனக்குள் ஏற்பட்ட தாழ்வுமனப்பான்மை போன்றவற்றால் எப்போதும் முகத்தில் மாஸ்க்குடன்தான் இருப்பேன். இவ்வளவு ஏன் எப்போதும் சப்போர்ட்டாக இருக்கும் ஜனா சாரிடம் கூட நான் என் தொடர்பினைத் துண்டித்துவிட்டேன். நம்மை இப்படி குண்டாகப் பார்த்தால் அவர் என்ன நினைப்பார் என்கிற எண்ணம்தான் அதற்கு காரணம்.

அதன்பிறகு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பொருளாதார நிலைமை காரணமாக அவரைப்போய் பார்த்தேன். அப்போதுகூட அவர் என்னிடம் என்னம்மா இவ்வளவு குண்டாக இருக்கிறாய் என்று எந்தவிதத்திலும் என்னிடம் கேள்வி கேட்கவில்லை. பாலியல் சீண்டல்கள் சினிமாவில் மட்டுமில்லை. பெண்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் இருக்கிறது. இந்த சமூகத்திற்கு, நீங்கள் தனியாக வசிக்கும் பெண் என்று தெரிந்துவிட்டால் போதும். அதன்பிறகு, நம்மிடம் அவர்களின் அணுகுமுறையும் பார்வையுமே வேற. ஒரு ஆணோட நாம் வெளியிடத்தில் நின்றுகொண்டு கேட்கும் உதவிக்கும், பெண்களாக தனியே சென்று கேட்கும் உதவிக்கும் இன்றளவும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது.

இதுல ஒரு முக்கியமான விஷயத்தை நான் கவனித்தேன். அதாவது, நமது உடல் சார்ந்த கவலைகள் நம் மனதில் இருக்கும்போது அதில் இருந்து மீண்டு வருவது என்கிற ஐடியா சுத்தமாக நமக்கு இருக்காது. ஆனால், இந்த நேரங்களில் மற்றவர்கள் நமக்கு ஆதரவாக இருந்துவிட்டால், நமக்கு கிடைக்கும் மனத்தெளிவில் ஏற்படும் ஒரு ஐடியா தான், ஏன் நாம் இதிலிருந்து மீள்வதற்கு முயற்சி செய்யக்கூடாது, ஒரு டாக்டரை போய் பார்க்கக்கூடாது என்பதாகத் தோன்றும். அதன்பிறகுதான் நான் ஜிம் எல்லாம் செல்ல ஆரம்பித்தேன். பிறகு என்னிடம் யாரெல்லாம் சப்போர்ட்டாக இருக்கிறா்களோ, என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி கூட்டி செல்கிறார்களோ அவர்களுடன் மட்டும்தான் தொடர்பில் இருந்தேன். அதன்பிறகுதான் எனக்கான வாழ்க்கைப் பாதையின் வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது.

ஜனா சார் மட்டும் இல்லைன்னா... - அந்த நேரத்தில் ஜனா சார் வேற இல்லை. ஏனென்றால் அவர்தான் என்னை இந்த இருட்டில் இருந்து அழைத்து வந்து வழிகாட்டியவர். ஆனால் அவர் என்னைச் சரியான பாதையில் அழைத்து வந்திருக்கிறார் என்பதே அதற்குப்பிறகுதான் எனக்குப் புரிகிறது. அவர் அன்று கூறியதுபோல டப்பிங் பேச ஆரம்பித்தேன். அதன்பிறகே நான் எனது நலன் விரும்பிய சிலரின் உதவிகளோடு ஒரு டப்பிங் ஸ்டூடியோ ஆரம்பிப்பதற்கான வேலைகள் நல்ல விதமாகப் போய் கொண்டிருக்கிறது. அடுத்த மாதத்தில் திறப்புவிழா இருக்கும் என்பதே எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்கிறார் சரண்யா.

இப்போது அந்த டப்பிங் ஸ்டூடியோ என் பெயரில்தான் இருக்கிறது. என்னை நம்பி எப்படி இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைத்திருக்கிறீர்கள் என்று நான் நண்பர்களிடம் கேட்டதற்கு, அவர்கள் சொல்லியது இதுதான். இந்த ஸ்டூடியோ உனக்கு கை கொடுக்கும். அதை வைத்து நீ நான்கு பேருக்கு கை கொடுக்கப் போகிறாய். முதலில் நீ இந்த சூழலில் இருந்து முழுவதுமாக வெளியே வந்துவிடு என்று சொன்னார்கள் பாருங்கள் அதுதானே நட்பு.

இன்று மகளிர் தினம். ஆனால் நான் ஆண்களைப் பற்றித்தான் அதிகம் பேசியிருக்கிறேன். ஏனென்றால் பெண்களைச் சார்ந்து வாழும் சூழ்நிலையில் இருக்கும் ஒரு ஆண் எப்போதும் பெண்களை தவறாகப் பார்க்க மாட்டான். பயன்படுத்த நினைக்கமாட்டான். எல்லா ஆண்களும் தவறானவர்கள் இல்லை என்பதை என் எண்ணத்தில் இன்று ஆணித்தரமாக பதிய வைத்திருக்கிறார்கள் உதவிய சக நண்பர்கள். என் வாழ்வாதாரத்தை உயர்த்த பலவிதத்திலும் முயற்சி செய்கிறார்கள்.

என் இந்த வளர்ச்சியில் ஆண்கள் மட்டும்தான் காரணம். என்னை கைத்தூக்கிவிட்ட நண்பர்களுக்கு சரியான நேரத்தில், `மச்சா இந்தா காசு, நீ வச்சிக்கோ` என்று நானும் உதவி செய்வேன். என்னைதச் சுற்றியிருக்கும் மனிதர்களை நான் மனதார நேசிக்கிறேன். இந்தக் காலச் சூழலில் பணம் தேவைதான். ஆனால் நாம் அதனை எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ள முடியும். ஆனால் மனிதர்களை அப்படி சம்பாதித்துக்கொள்ள முடியாதல்லவா?

பாஸ்ட் இஸ் பாஸ்ட்: இங்கு பெண்கள் நதி மாதிரி போகிற போக்கில் ஓடிக்கொண்டே இருக்கணும். எதையும் ஈஸியாக எடுத்துக்கொண்டு கடந்த காலத்தை நினைக்கவே கூடாது. வாழ்க்கை நம்மை எந்தநேரத்தில் வேணும் என்றாலும் உயர்த்தும். ஆனால் அதற்கு நாம் எந்தவிதத்திலாவது ஒரு அடித்தளத்தை அமைத்திருக்க வேண்டும். அப்படி எதுவுமே செய்யாமல் வாழ்க்கையை மட்டும் குற்றம் குறை சொல்வதில் எந்த நியாயமும் இல்லை.

ஒரு காலத்தில் நான் நினைத்திருக்கிறேன். நம்மை அப்யூஸ் பண்ணினவங்களை நாம சந்திக்கிற ஒரு வாய்ப்பு கிடைத்தால், அவர்களைக் கண்டு நான் பயந்துவிடுவேனோ என்று நினைத்திருக்கிறேன். ஆனால் நிதர்சனம் என்னவென்றால், ஓரு விழாவில் என்னை அப்யூஸ் பண்ணிய ஒருவரை பார்க்கும் சூழல் அமைந்தது. அந்த விழாவில் நான்தான் சிறப்பு விருந்தினரும்கூட. ஆனால் நான் அவரை நேருக்கு நேராகப் பார்க்கிறேன். ஆனால் அவர் என்னை ஏறெடுத்துப் பார்க்கவேயில்லை. என்னைக் கண்டு ஓடுகிறார். அந்தக் கூட்டத்தில அவர் எங்கே ஒளியறதுன்னுகூட அவருக்குத் தெரியவில்லை. அந்த விழா கூட்டத்தில் நான் அவரைப் பற்றி ஏதாவது சொல்லிவிடுவேனோ என்று என்னைக் கண்டு பயந்து, நான் அங்கிருந்து போய்விட்டேனா என்று ஒளிந்து பார்த்துக்கொண்டிருந்தார். தவறும் செய்யும் ஆண்களுக்கு பொது வெளியில் அவ்வளவு பயம் இருக்கு.

சீண்டல்களுக்கு அஞ்சாதீர்கள் - பெண்களிடம், சூழ்நிலைகளை எதிர்த்து நில்லுங்கள். ஓடி ஒளியாதீர்கள் அப்படின்னு எல்லாம் நான் சொல்லமாட்டேன். சூழ்நிலைகள் எல்லா நேரங்களிலும் நமக்கானதாக அமையாது. அப்படியான ஒரு சூழலில் நாம் மாட்டிக்கொள்ளும்பட்சத்தில், வெளியே வர முயற்சிப்போம். அந்த முயற்சியில் தோற்றாலும்கூட பரவாயில்லை. அதற்கடுத்தான நம் வாழ்க்கை மீது நாம் ஓர் ஆணித்தரமான நம்பிக்கையை பதிக்க வேண்டும். அதுதான், அந்த நம்பிக்கைதான் நம்மை கைப்பிடித்து நமக்கே நமக்கான இடத்திற்கு சரியான பாதையில் அழைத்துச் செல்லும். அப்படித்தான் என் வாழ்விலும் நடந்திருக்கிறது.

நான் அன்று தயங்கி வீட்டிற்கு உள்ளேயே கிடந்துவிடாமல் வெளியே வரப்போய்தான், பலர் இருட்டில் இருந்த என்னை வெளிச்சத்திற்கு கூட்டி வந்திருக்கிறார்கள். எந்த கோடம்பாக்கம் ஏரியாவில் நான் கீழே இறங்கி வந்தேனோ அதே கோடம்பாக்கத்தில் இப்போது நான் மேல்நோக்கி ஏறிக் கொண்டிருக்கிறேன். கோடம்பாக்கம் எப்போதும் நம்மை ஏற்றுக்கொள்ளும். அரவணைத்துக்கொள்ளும். இப்பகூட ஜனா சார் சொன்னதைத்தான் எல்லா பெண்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன். என்னவென்றால்...

“நீ முதலில் களத்துக்கு வர வேண்டும். அப்புறம்தான் மற்றவர்களின் உதவி கிடைக்கும். நீ வெளியே வராமலே இருந்துவிட்டு மற்றவர்கள் அவர்களாக வந்து உதவி செய்வார்கள் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்.”

- தொடர்புக்கு: gandhiraja.g@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x